மோட்டார் பைக் மீது வேன் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயா பைக்கில் அதிவேக பயணம்! இன்டிகேட்டர் போடாமல் திரும்பிய வேன்! அடுத்த நொடி அரங்கேறிய கோரம்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வி.எம்.சத்திரத்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர் அவினேஷ் வரதன் ஆகியோர் நேற்று இரவு திருச்செந்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் செய்துங்க நல்லூர் அருகே வரும்போது பெட்ரோல் போடுவதற்காக சாலையை கடந்தனர்.
அப்போது பின்னால் வரும் வாகனங்களுக்காக எச்சரிக்கை சைகை காண்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இவர்கள் திடீரென மோட்டார் பைக்கை வலதுபுறம் திருப்பும்போது இதை சற்றும் எதிர்பாராத பின்ல் வந்த வேன் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் புகைப்படக் கலைஞர் அவினேஷ் வரதன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிந்தார். விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநர் தப்பியோடி விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்துங்கநல்லூர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் திருப்பாற்கடல் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
விபத்தில் பலியான மணிகண்டன் ஏரல் தாலுகாவுக்குட்பட்ட மூக்குப்பீறி கிராம நிர்வாக அலுவலர் ஆவார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.