சின்னம் ஒதுக்கியதில் முறைகேடு! தேர்தல் அதிகாரி மீது அதிமுகவினர் தாக்குதல் ! திமுக, வி.சி. சாலைமறியல்!

உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடலூரில் தேர்தல் அதிகாரியை அதிமுகவினர் தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. கடலூர் ஒன்றியத்திற்கு டிசம்பர 27ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடுவது மற்றும் சின்னம் ஒதுக்கும் பணியும் முடிவடைந்தது.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் 12வது வார்டில் பிரியதர்ஷினி கணேஷ், 21வது வார்டில் குமுதம் சேகர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதே வார்டுகளில் திமுக கூட்டணி சார்பில் சீனு மற்றும் வாணி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கியிருந்தார் தேர்தல் அதிகாரி. அப்போது அங்கு வந்த அதிமுக நிர்வாகி சேகர் உள்பட சிலர் தேர்தல் அலுவலர் அருளரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினிர். அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது முறைகேடு என குற்றம்சாட்டினர். மேலும் சின்னம் ஒதுக்கக்கூடாது என அதிமுகவினர் தேர்தல் அலுவலரும் உதவி ஆட்சியருமான அருளரசனை தாக்கியதாக கூறப்படுகிறது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த அருளரசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக கூட்டணியினர் சின்னம் ஒதுக்கீடு செய்த பிறகு குழப்பம் ஏற்படுத்துவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது அதிமுகவினராகல் தேர்தல் அதிகாரி தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.