ஒரு முறை மாதவிடாய் வந்தால் உடம்புக்கு ஒரு யூனிட் ரத்தம் ஏத்தணும்! மகளின் நிலையால் கலங்கும் பெற்றோர்!

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் குறைவாக உள்ளதால் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வந்தவுடன் உதிரப்போக்கு அதிகமாக இருப்பதால் ஒரு யூனிட் ரத்தம் ஏற்றுவதை தங்களுடைய வழக்கமாக கொண்டிருப்பதாக அந்தப் இளம்பெண்ணின் பெற்றோர் கண்ணீருடன் கூறுவது நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.


சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலையில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகள் பெயர் ஆர்த்தி. இவருக்கு வயது 23. ஆர்த்தி கடந்த 13 ஆண்டுகளாக வில்சன் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மனிதர்களின் உடலில் தாமிரச் சத்து அதிகமாக சேரும்பொழுது உருவாகக்கூடிய நோயின் பெயர்தான் வில்சன். பொதுவாகவே மனிதர்களின் உடலில் செருலோபிளாஸ்மின் என்ற புரதம் உற்பத்தியாகும்.

இந்த புரதம் உற்பத்தி ஆனபின்பு உடலுக்கு தேவையான தாமிர சக்தியை எடுத்துக்கொண்டு மீதம் இருப்பதை பித்தப்பை வழியாக வெளியேற்றிவிடும். ஒருவேளை இந்த புரதம் சுரப்பதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நம் உடலில் இருக்கும் தாமிரம் அங்கங்கே தங்கி விடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய பிரச்சனையை தான் வில்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நோயை பொறுத்தவரையில் லட்சத்தில் 3 பேருக்கு இந்த நோய் தாக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். அந்த மூவரில் ஒருவர் தான் இந்த இளம்பெண் ஆர்த்தி ஆவார். ஒருவேளை இந்த தாமிரம் உடலில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டால் அது மனிதர்களின் மூளை, நரம்பு மண்டலம், கண், கல்லீரல் என பல உறுப்புகளை தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதே மாதிரிதான் உடலிலும் அதிகமாக சேர்ந்து உள்ள தாமிர சத்து அவரது பித்தப்பை வழியாக வெளியேறாமல் நின்று உள்ளது. கடந்த 13 ஆண்டு காலமாகவே மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தன்னுடைய நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். ஆர்த்திக்கு 10 வயது இருக்கும் பொழுது திடீரென்று அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை அவரது பெற்றோர் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களும் எல்லாவித பரிசோதனையும் செய்து பின்பு மருந்து மாத்திரைகளைக் கொடுத்து உள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆர்த்தியின் கல்லீரல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். பின்னர் நீண்ட முயற்சியை அடுத்து விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒரு பெண்ணின் கல்லீரலை ஆர்த்திக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தியுள்ளனர். 

அறுவை சிகிச்சை முடிந்தவுடன் ஆர்த்தி நலமுடன் ஆரோக்கியமாக இருப்பார் என்று எதிர்பார்த்த அவரது குடும்பத்தினருக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஆர்த்தி கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பொழுது கல்லீரல் குணப்படுத்துவதற்காக எடுத்துக் கொண்ட மருந்துகள் அவரது உடலில் பலவித சைட் எஃபெக்ட் களை உருவாக்க ஆரம்பித்தது. அதாவது அந்த மருந்தை உட்கொண்டதால் அவரது உடலில் இருந்த வெள்ளையணுக்கள் வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளது.

இதனால் உடலில் ஒரு சின்ன காயம் ஏற்பட்டாலும் அதிலிருந்து வெளியேறும் ரத்தத்தை நிறுத்துவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆகும் என்று கண்ணீரோடு தெரிவிக்கின்றனர் அவரது பெற்றோர். அதுமட்டுமல்லாமல் ஆர்த்தி தன்னுடைய மாதவிடாய் காலங்களில் முதல் பத்து நாட்கள் படாதபாடு படுவதாகவும் அவரது தந்தை கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதிலும் ஒருசில நாட்களில் ஆர்த்தியால் பாத்ரூமை கூட விட்டு வெளியே வர முடியாத நிலையில் அவதிப்படுவர் என்று பெற்றோர் கூறுகின்றனர். மாதவிடாய் காலங்களில் நிற்காமல் வெளியேறும் உதிரப்போக்கால் அவதிப்பட்டு வரும் ஆர்த்திக்கு மாதாமாதம் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஒரு யூனிட் ரத்தத்தை ஏற்றுவதை தங்களது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை மட்டுமல்லாமல் அதை உட்கொண்ட மருந்திலிருந்து ஸ்டீராய்ட் அவரது எலும்புகள் எல்லாம் தாக்கி அவரால் நடக்க முடியாத சூழ் நிலைக்கு தள்ளியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அவரது பித்த குழாயிலும் அடைப்பு ஏற்பட்டு அவர் மீண்டும் அவதிப்பட்டு வருகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த பொழுது தற்போது நிலவிவரும் கொரோனா பிரச்சனையால் அவர்கள் செயற்கையாக செயல்படும் பை ஒன்றை வயிற்றில் துளையிட்டு செயல்பட வைத்துள்ளனர். பையை வீட்டிலிருந்தபடியே ஆர்த்தியின் பெற்றோர் அவருக்கு மாற்றி விடுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் இந்தப் பைகளை மாற்றும் பொழுது ஆர்த்திக்கு உயிர்போகும் வலி ஏற்படும் என்று அவரது தந்தை கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

இதுவரை ஆர்த்தியின் மருத்துவ செலவிற்காக அவரது பெற்றோர் அவர்களிடமிருந்து கடன் பெற்று 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறி உள்ளனர். இன்னும் கூட பல லட்ச ரூபாய் செலவாகும் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்துள்ளனர். இருப்பினும் எவ்வளவு பணம் செலவானாலும் தன்னுடைய மகள் மட்டும் உடல்நலம் தேறி நலமுடன் வாழவேண்டும் என்றும் அவர் நல்ல முறையாக படித்து இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து இருக்கவேண்டும் எனவும் அவரது பெற்றோர் ஆசைப்படுகின்றனர். இதுவரை அவர்களுக்கு உதவி செய்து வந்த நிலையிலும் இன்னமும் அவர்களுக்கு தேவையான உதவிகளை யாரேனும் செய்தால் நன்றாக இருக்குமென்று அவர்கள் மிகுந்த ஏக்கத்துடன் கூறுவது நமது நெஞ்சங்களை பதைபதைக்க வைக்கிறது.