தேர்தல் முடிந்த பிறகு ஓரங்கட்டப்பட்ட ஆ.ராசா..!? திமுகவில் புதிய புகைச்சல்!

தேர்தல் வெற்றிச் சான்றிதழை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தும் நிகழ்வு வரை உடன் இருந்த ஆ.ராசா அதன் பிறகு ஸ்டாலின் வீட்டு பக்கமோ அல்லது அண்ணா அறிவாலயம் பக்கமோ வரவே இல்லை என்கிறார்கள்.


சட்டமன்ற தேர்தல் சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் ஆ.ராசா மீது திமுக தலைமை நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் அவர் பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடு விதித்ததாக கூறுகிறார்கள்.

அப்போது முதலே ஆ.,ராசா அதிருப்தியில் இருந்ததாகவும் ஆனால் தேர்தல் முடிவுகள் அவர் மனநிலையை மாற்றியதாகவும் சொல்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக முன்னிலை பெறத் தொடங்கியதும் ஆ.ராசா நேரடியாக மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றார்.

அப்போது முதல் அன்று இரவு கலைஞர் நினைவிடம் சென்று வெற்றிச் சான்றிதழை வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தும் வரையில் ஆ.ராசாவை பார்க்க முடிந்தது. மறுநாள் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆ.ராசா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு மட்டுமே அழைப்பு என்று திமுக தலைமை கூறியதால் ஆ.ராசாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்கிறார்கள்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்கிற அடிப்படையில் தனக்கு எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆ.ராசாவின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது.

ஆனால் எமஎல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க ஆ.ராசாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆ.ராசாவும் கூட்டத்திற்கு செல்லவில்லை. இதன் பிறகு ஸ்டாலின் தொடர்புடைய எந்த நிகழ்விலும் ஆ.ராசாவை பார்க்க முடியவில்லை. இதற்கு முன்பு ஆளுநரை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் ஸ்டாலினுடன் ஆ.ராசா இருப்பார். ஆனால் ஆட்சி அமைக்க உரிமை கோர ஸ்டாலின் சென்ற போதும் ஆ.ராசா மிஸ் ஆகி இருந்தார். கடந்த சில நாட்களாக ஆ.ராசா பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தற்போது வரை தன்னுடைய நிகழ்ச்சிகளை தவறாமல் அதில் பதிவிட்டு வருகிறார். அந்த பதிவில் கூட கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலினுடன் ஆ.ராசா இருப்பது அதனை தொடர்ந்து டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோருடன் ஸ்டாலினை சந்தித்த புகைப்படங்கள் மட்டுமே உள்ளன.

அதே சமயம் பதவி ஏற்பு விழாவில் ஆ.ராசா பங்கேற்ற புகைப்படங்கள் இல்லை. அதாவது அந்த புகைப்படங்களை ஆ.ராசா பேஸ்புக்கில் பதிவேற்றவில்லை. இதற்கு காரணம் பதவி ஏற்பு விழரிவில் ஆ.ராசாவுக்கு தகுந்த முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தான் என்கிறார்கள். முன் வரிசையிலும் அவருக்குஇடம் அளிக்கப்படவில்லை.

இதனிடையே முதலமைச்சராக பொறுப்பேற்க ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்ற போதும் அவருடன் ஆ.ராசா செல்லவில்லை. இவ்வளவு ஏன் கலைஞர், அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு ஸ்டாலின் சென்ற போதும் அங்கு ஆ.ராசாவை பார்க்க முடியவில்லை. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகும் கூட அவரது வீட்டிற்கு ஆ.ராசா செல்லவில்லை. அதே சமயம் அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள், புதிய எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆ.ராசாவை தேடிச் சென்று சந்தித்து வருகின்றனர்.

திமுக ஆ.ராசாவை ஒதுக்கியிருந்தால் அமைச்சர்கள் தேடிச் செல்வது இயலாத காரியம் . எனவே ஆ.ராசா தான் தற்போது ஒதுங்கியிருப்பது போல் தெரிகிறது. அதற்கு காரணம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதாக மட்டுமே இருக்க முடியும் என்கிறார்கள்.