அரபு நாடுகள் வழியில் இந்தியா! குழந்தையை கற்பழித்த ஆசிரியனுக்கு 5ந் தேதி மரண தண்டனை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 வயதுச் சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த -பள்ளி ஆசிரியருக்கு மார்ச் மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.


ஜபல்பூரைச் சேர்ந்த ஆசிரியர் மகேந்திரசிங் கோண்ட். கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு நேரத்தில் குழந்தையைக் கடத்திய இந்த இவன், அருகில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததோடு குழந்தை இறந்துவிட்டதாகக் கருதி அங்கேயே வீசிவிட்டு வந்து விட்டான்.

 

இந்நிலையில் குழந்தையை இரவு முழுவதும் தேடிய குடும்பத்தினர், மிக அவலமான நிலையில் குழந்தையை வனப் பகுதியில் கண்டெடுத்தனர். 

 

குழந்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாநில அரசு சார்பில் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

 

கடுமையாக சேதம் அடைந்திருந்த சிறுமியின் உள்ளுறுப்புகளை சீரமைக்க பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

 

இதனிடையே நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு புலனாய்வு செய்த போலீசார் சில மணிநேரங்களிலேயே மகேந்திர சிங்கை கைது செய்தனர். அவனுக்கு எதிராக தப்பவே முடியாத அளவுக்கு அழுத்தமான ஆதாரங்களுடன் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

 

வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்று மகேந்திரசிங்குக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்த செஷன்ஸ் நீதிமன்றம் விசாரணைக்குப் பிறகு அவனுக்கு மரண தண்டனை விதித்தது. 

 

அதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்த மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற கொடூரன்களை தப்ப விட முடியாது என்று தெரிவித்தனர். ஆசிரியர் பொறுப்பில் உள்ள இதுபோன்ற நபர்கள் மாணவர்களுக்கு எத்தகைய ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

 

உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து செஷன்ஸ் நீதிமன்றமும், போலீசாரும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான டெத் வாரன்ட் பிறப்பித்துள்ளனர். இது அந்த கொடூரன் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

வரும் மார்ச் மாதம் 5ந் தேதி அந்த கொடூர ஆசிரியர் தூக்கில் ஏற்றப்பட உள்ளான். இதன் மூலம் பாலியல் பலாத்கார குற்றத்திற்கு முதல் முறையாக இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

 

திட்டமிட்டபடி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் படி தண்டனை பெறும் முதல் குற்றவாளியாக மகேந்திர சிங் இருப்பான்.