பாடை கட்டி பிணமாக நேர்த்திக்கடன்! மாரியம்மன் கோயில் விநோத வழிபாடு!

வலங்கைமான் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அமைந்துள்ளது.


இந்த வலங்கைமான் மாரியம்மன் கோவில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். 108 சக்தி பீடங்களை மிஞ்சிய கோயில் இது. அத்தனை சக்தி வாய்ந்தது. இக்கோயிலில் பக்தர்கள் அவர்களது வேண்டுதல் நிறைவேற பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பம்சமாகும். மேலும் இக்கோயிலில் பேச்சியம்மன், இருளன், மதுரைவீரன், விநாயகர் ஆகியோர் அருள்பலிக்கின்றனர்.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமண தடை, பார்வை இழந்தவர்கள், அம்மை நோய் கண்டவர்கள் ஆகியோர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்து குணம் பெறுகின்றனர். வலங்கைமான் அருகில் உள்ள ஐயனார் கோயில் வழியாக ஒரு பிராமண தம்பதியரால் ஒரு பெண் குழந்தை விட்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை அந்த பகுதியில் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் எடுத்து வளர்த்தனர்.

அந்த குழந்தை அம்மை நோய் கண்டு உயிர் பிரிந்தது. அவர்கள் குழந்தையை அவர்கள் வீட்டு கொல்லைப்புறத்தில், கீற்றுக்கொட்டகை அமைத்து சமாதி வைத்தனர். சமாதிக்கு தினமும் விளக்கேற்றிவந்தனர், வீட்டில் சமைக்கும் உணவுப்பண்டங்களை தினமும் படைத்தனர், காலப்போக்கில் சமாதியை அனைவரும் வழிபடத்துவங்கினர்.

வேண்டியவர்களுக்கு வேண்டிய பலன் கிடைத்ததால் அந்த குழந்தையை சீதளாதேவி என்று பெயரிட்டு அம்மனாக வழிபட்டனர். சீதளாம் என்றால் குளிர்ச்சி என்று பொருள் அம்மை ஏற்பட்டு குளிர்ந்து போனதால் அந்த பெண் தெய்வம் சீதளாதேவி என்று அழைக்கப்படுகிறாள். ஒவ்வொரு திருத்தலத்திற்கும் தனித்ததோர் மகிமை உண்டு. வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலின் மகிமையே பாடைக்காவடி திருவிழாதான்.

அம்மை கண்டவர்கள் எந்த மருத்துவரையும் அணுகாமல் மாரியம்மன் ஆலயத்தில் தங்கியிருந்து அம்மனை நினைத்து வழிப்பட்டு வந்தால் சீதளாதேவி குணமாக்கி பக்தர்களை நலமுடன் அனுப்பி வைப்பாள். பின்னர் இத்திருத்தலத்தின் மகிமை அகில உலகம் எங்கும் பரவியது.

மருத்துவரால் கைவிடப்பட்டு “எந்தப்பக்தன் அம்பாளிடம் எனக்கு உயிர்ப்பிச்சை தா! உனக்குப்பாடைக்காவடி எடுக்கிறேன்” என்று வேண்டிக் கொள்கிறானோ, அவனுக்கு உயிர்ப்பிச்சை தந்து நல்வழியில் வாழ வைக்கிறாள் அன்னை. வேண்டுதல் நிறைவேறிய பிறகு பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

திருவிழா அன்று வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலை சுற்றி நூற்று கணக்கான பாடைகள். பாடைகளில் பிணங்கள், பிணங்களுக்கு அடிக்கப்படும் மேளம், தீச்சட்டி என ஒரு பகல் நேரத்தில் வீதி முழுக்க பாடைகாவடிகள் வரும். பாடைகளில் படுத்திருப்போர் வாய்கட்டி உடலில் கயிறு கட்டி பாடைகாவடி எடுக்கும் பக்தர்களை பார்க்கும் போது அன்னையின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை எத்தகையது என்பது புரிந்தாலும் ஒரு உயர்ந்த தத்துவத்தையும் இந்த பாடைகட்டி திருவிழா போதிக்கிறது.

நாம் எப்படி தான் வாழ்ந்தாலும் கடைசியில் இதுதான். இவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கும் வரை எப்போதும் எல்லோரிடமும் அன்போடும் நல்ல மனதோடும் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு. மாடுகளும் நோய்வாய்பட்டுவிட்டால் அன்னையை நினைத்து விபூதி பூசி வேண்டிக்கொண்டு அவைகள் நலமான பிறகு ஆடு மாடுகளை அன்னை சீதளாதேவிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்கைமான் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகிறது. பங்குனித்திருவிழா பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்குகிறது. அன்று இரவு அம்பாளுக்கும் பூசாரிக்கும் காப்பு கட்டப்படுகிறது. காப்புக் கட்டிக் கொள்ளுதல் என்பது இவ்விழா முடியும் வரை தூய்மையாக இருந்து விழாவை புனிதமாக முடித்து வைப்பதற்காக எடுத்துக் கொள்ளும் உறுதிச் செயலாகும்.

காப்பு கட்டிய பின் விழா முடிந்து காப்பவிழ்க்கும் வரை அவ்வூர் மக்கள் வெளியூர் செல்லக்கூடாது என்பது மரபு. 8-ஆம் நாள் திருவிழாவைப் “பாடைக்காவடி திருவிழா” எனச் சிறப்பாக அழைப்பர்.