உறக்கத்தில் இருந்த மனைவியை 40 முறை கத்தியால் குத்தி கொன்ற கணவன்!

அரியானா மாநிலம் குர்கானில் மனைவி உறங்கிக் கொண்டிருக்கும்போது 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.


அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்தவன் பங்கஜ பரத்வாஜ். இவனுக்கு 2017ஆம் ஆண்டில் வன்சிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் வன்சிகா சனிக்கிழமை அன்று வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

 

அவரது உடலில் கழுத்து, முகம், நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் 40 முறை கத்தியால் குத்தப்பட்ட தடயங்கள் இருந்தன. போலீசார் விசாரணை நடத்திய போது அவரது கணவர் சம்பவ இடத்தில் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

இதை எடுத்து பங்கஜின் செல்போன் சிக்னலை ஆராய்ந்து அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

 

தனது மனைவி தன்னை அனைவரது முன்னிலையிலும் அசிங்கப்படுத்தி வந்ததாகவும் தினம்தோறும் சண்டையிட்டு வந்ததாகவும் கூறிய பங்கஜ் இதன் காரணமாகவே அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

 

சனிக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் கார் பழுது பார்க்கும் ஸ்பேனரை வைத்துமுதலில் தாக்கியதாகவும் பின்னர் கத்தியை எடுத்து ஆத்திரம் தீர அவளை சரமாரியாக குத்தியதாகவும் அவன் கூறியுள்ளான். தம்முடன் பணிபுரியும் நசீர் அகமது என்பவர் கொடுத்த யோசனைப்படியே கொலை திட்டத்தை அரங்கேற்றியதாக அவன் தெரிவித்துள்ளான்.

 

இதையடுத்து நசீமையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட வன்சிகாவின் தந்தை, காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகளை வரதட்சணை கேட்டு பங்கஜின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

சனிக்கிழமை அன்று தனக்கும் தனது கணவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் அப்போது தன்னை கொலை செய்யப்போவதாக தனது கணவர் மிரட்டி சென்றதாகவும் வன்சிகா கூறியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஆனால் அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தும் வகையில் கணவனை தொடர்ந்து பேசும் வழக்கம் வன்ஷிகாவுக்கு இருந்ததாகவும் இதனால் தான் கொலை செய்யப்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.