டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளை போட்டு..! குடிமகன்களுக்காக சிறுவன் செய்த செயல்! ராமநாதபுரம் பரபரப்பு!

ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் சிறுவன் ஒருவன் டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மதுபான பாட்டில்கள் திருடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.


கொரனா நோய் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளும் தமிழகத்தில் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். மத்திய அரசு அறிவித்த ஏப்ரல் 14 வரையிலான ஊரடங்கை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற கவலையுடன் இருக்கின்றனர். சில இடங்களில் மதுபானக் கடையின் ஷட்டரை உடைத்தும் சில மதுப்பிரியர்கள் மதுபானங்களை திருடிச் செல்கின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையின் பின்புறச் சுவற்றை துளையிட்டு சிறுவன் ஒருவன் மதுபான பாட்டில்களை திருடியுள்ளான். அதுமட்டுமின்றி அந்த மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளான். தகவல் அறிந்து வந்த போலீசார் அவனை பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் அவன் எப்படி திருட்டு வேலையில் ஈடுபட்டான் என்பதை போலீசார் செய்முறை விளக்கம் செய்ய சொன்னார்கள்.

சிறுவனும் சுவற்றை துளையிட்டு மதுபான பாட்டில்கள் திருடியதை செய்து காண்பித்தான். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கூலித்தொழிலாளர்கள் வருவாய் இழந்த நிலையில் இதுபோன்ற சிறுவர்கள் தங்கள் வீட்டு வறுமையை ஓரளவேனும் போக்க இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் செய்து மாட்டிக்கொள்ளவும் செய்கின்றனர். தற்போது அந்த சிறுவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால் எதிர்காலத்தில் அவனது படிப்பும் பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.