மனைவி சடலத்திற்கு 2 நாட்களாக வீட்டில் வைத்து பால் ஊட்டி பராமரித்த கணவன்..! மதுரை பகீர்! அதிர்ச்சி காரணம்!

மனைவி இறந்தது அறியாமல் முதியவர் ஒருவர் 2 நாட்களுக்கு பாலூட்டி வந்த சம்பவமானது மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. பாண்டியின் வயது 90. இவருடைய மனைவியின் பெயர் ஆண்டாள். இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.

இதில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள நால்வரில் 3 பேர் குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலும், ஒருவர் தேனி மாவட்டத்திலும் வசித்து வருகின்றனர். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை தங்களுடைய பெற்றோரை பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் அவர்களால்  தங்களுடைய பெற்றோரை சந்திக்க வாய்ப்பு ஏற்படவில்லை. உடனே தங்களுடைய பெற்றோருக்கு அருகே வசிக்கும் உறவினர்களை தொடர்புகொண்டு, அவர்களிடம் தங்களுடைய பெற்றோருக்கு உணவளித்து பார்த்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அவர்களும் தொடக்கத்தில் சில நாட்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் திருமங்கலத்தில் 5 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் கடுமையான ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டது. இதனால் உறவினர்களாலும் பாண்டியின் வீட்டிற்கு செல்ல இயலவில்லை.

இந்நிலையில் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் தவித்து வருவதாக பாண்டி தன்னுடைய பிள்ளைகளிடம் கூறியுள்ளார். இதிலும் சோகமாக ஆண்டாள் ஒரு வாரத்திற்கு முன்னர் கீழே விழுந்துள்ளார். அவரை பாண்டி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியின் ஒரு மகளான நாகலட்சுமி என்பவர் அரசின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தன்னுடைய தந்தையின் நிலையை எடுத்து கூறியுள்ளார்.

உடனடியாக திருமங்கலம் வட்டாட்சியர் அதிகாரிகளை பாண்டியின் வீட்டிற்கு அனுப்பி வைத்து உணவளிக்க உத்தரவிட்டார். ஆனால் ஆண்டாள் நிர்வாணமாக இருப்பதை பார்த்தவுடன் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, அவர் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கும் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண்டாளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக பாண்டியின் பிள்ளைகளிடம் காவல்துறையினர் ஆண்டாள் இறந்த செய்தியை கூறியுள்ளனர். தன் மனைவி இறந்தது தெரியாமல் பாண்டி 2 நாட்களுக்கு பாலூட்டி வந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.