அண்ணா நகர், அரும்பாக்கம், புரசைவாக்கம்! சென்னையில் 11 இடங்களில் கொரோனா பரவும் அபாயம்! அதிகாரிகள் வெளியிட்ட ஷாக் தகவல்!

சென்னையில் 9 இடங்களில் கொரனா பரவுவதற்கான அதிகம் வாய்ப்புள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 1.5 லட்சம் வீடுகளில் கொரனா தொற்று உள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.


சீனாவில் தொடங்கிய கொரனா இத்தாலி, அமெரிக்கா என உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. வெளிநாட்டவர்கள் மூலம் இந்தியாவில் பரவிய கொரனா பாதிப்பு தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் கொரனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் சந்தேகிக்கப்படும் 11 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று கொரனா தொற்று உள்ளதா என கண்டறியப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை சுமார் 1.5 லட்சம் வீடுகளில் உள்ள நபர்களுக்கு கொரனா தொற்று உள்ளதாக என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளதா என்றும் பணியாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் அண்ணா நகர் கோட்டம் அரும்பாக்கம், புரசைவாக்கத்தில் கொரோனா வைரசால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

தேனாம்பேட்டை கோட்டம் சாந்தோமில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் அந்த பகுதிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோடம்பாக்கம் கோட்டம் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததால் அங்கேயும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் போரூரிலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆலந்தூர், கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் அவர்களது வீடுகளில் இருந்து 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.