7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை! கொரோனாவுக்கு எதிராக வாரி வழங்கி நெகிழ்ச்சி! எப்படி தெரியுமா?

கொரோனாவுக்கு எதிராக 7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை தங்களால் இயன்ற நிதியை மக்களுக்காக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.


உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக இந்த கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் நம்முடைய நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் இல்லாமல் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கொரோனாவுக்கான தங்களால் முடிந்த நிதியை வழங்குமாறு கூறியிருந்தார். 

பிரதமரின் பேச்சை மதித்து பலரும் தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 82 வயது மூதாட்டி சல்ஃபா உஸ்கர் என்பவர் அரசுப்பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். தனது சேமிப்பில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண பணிக்காக அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனைப்பற்றி அந்த வயது முதிர்ந்த மூதாட்டியிடம் கேட்டபொழுது, கொரோனா ஒழிப்பதற்கு தன்னால் முயன்ற நிதியை வழங்க வேண்டும் என முடிவெடுத்து இந்த தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். அனைவரும் அரசாங்கத்தின் வழிநடத்துதல் படி அவர்களது சொல்லை மதித்து இந்த வைரஸ் தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். 

இந்த வயது முதிர்ந்த மூதாட்டி பேசும் இந்த வீடியோ பதிவானது மத்திய பிரதேசத்தில் உள்ள ஊடகம் ஒன்றில் வெளியானது. சில மணி நேரங்களிலேயே வைரலாக பரவி வருகிறது. 

மூதாட்டியை போலவே மிசோரம் மாநிலத்தில் 7 வயது சிறுவன் உதவி செய்வதற்கு வயது ஒன்றும் எல்லை கிடையாது என்பதை நிரூபித்துள்ளார். அந்த சிறுவன் ரோமல் லால்முவான் சங்கா, தான் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூபாய்.333 -ஐ உள்ளூரில் இருக்கும் கிராம தலைவரிடம் கொண்டு சென்று ஒப்படைத்திருக்கிறார்.

இந்த தகவலை அறிந்த மிசோரம் மாநிலத்தின் முதல்வர் ஜோரம் தங்கா இந்த சிறுவனை வெகுவாக பாராட்டி அவரது மனிதாபிமானத்தை போற்றியுள்ளனர்.