மூளையில் கட்டி..! உயிருக்கு போராடிய நிலையிலும் விலங்குகளின் நலனுக்காக நிதி திரட்டிய 8 வயது சிறுமி! நெகிழ வைக்கும் சம்பவம்!

நியூயார்க்: மூளை புற்றுநோயால் உயிரிழந்த சிறுமி, சாகும் முன் கடைசியாக, விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஹார்ட்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் எம்மா மார்ட்டின்ஸ். 8 வயதான இச்சிறுமிக்கு மூளை புற்றுநோய் பாதித்தது. இதற்காக தீவிர மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த சிறுமி, நாய்களை பாதுகாப்பதற்காக, அறக்கட்டளை ஒன்றை நிறுவி நன்கொடை பெற்று உதவி புரிந்து வந்திருக்கிறார்.

சமீபத்தில்தான் சிறுமிக்கு 8வது பிறந்த நாள் வந்தது, அதனை ஒட்டி விலங்குகளுக்கு இருப்பிடம் மற்றும் நாய்களுக்கு பயன்படக்கூடிய பல்வேறு பரிசு பொருட்களை தரும்படி தனது உறவினர்கள், நண்பர்களிடம் சிறுமி கோரிக்கை விடுத்திருந்தார். இதையொட்டி, அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்தன. ஆனால், அதைப் பார்க்கத்தான் சிறுமி எம்மா மார்ட்டின்ஸ் உயிரோடு இல்லை.  

ஆம், மூளைப் புற்றுநோய் கடந்த ஞாயிறன்று அவரது உயிரை பறித்துவிட்டது. அவருக்காக குவிந்த ஏராளமான பரிசு பொருட்களை வைத்தபடி சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர் கதறி அழுதனர். நாய் உள்பட அனைத்து விலங்குகளையும் நேசித்த சிறுமி, அவற்றை பாதுகாக்க முயற்சிக்கும்படி மனித குலத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதற்காக அறக்கட்டளை ஒன்றையும் நிறுவியிருந்தார். அந்த அறக்கட்டளையை தொடர்ந்து செயல்படுத்தி, சிறுமியின் நோக்கம் நிறைவேற பாடுபடுவோம் என, அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.