புதையல் எடுக்க வேண்டும்! பக்கத்து வீட்டு சிறுவனை நரபலி கொடுத்த ராணி!

புதையலுக்காக எட்டு வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரம் நடந்துள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஆதர்ஷ். இவனை கடந்த புதன்கிழமை முதல் காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஒருபுறம் சிறுவனை தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் நீர் நிலையின் கரை ஒன்றில் தெருநாய்கள் மோப்பம் பிடித்து சென்று குழி பறித்தன.

அப்போது சிறுவனின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் அந்த சடலமானது சிறுவன் ஆதர்ஷ் என்பதை உறுதி செய்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அச்சிறுவனை அண்டைவீட்டாரே நரபலி கொடுத்து இருக்கும் அதிர்ச்சிகர தகவல் தெரியவந்தது.

நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் தங்கப் புதையலை வெளியில் எடுக்கவே அச்சிறுவனை பலி கொடுத்ததாக அண்டை வீட்டை சேர்ந்த ராணி மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ராணி மற்றும் அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் சிலரை அவர்கள் தேடி வருகின்றனர்.