தனது 74வது வயதில் முதல் முறையாக தாயாகி அதுவும் இரட்டையர்களை பெற்றெடுத்துள்ளார் ஏர்மாட்டி மங்கம்மா என்பவர். இது ஆந்திரா முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
54 வருட காத்திருப்பு! 74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான மங்கம்மா பாட்டி! நெகிழ வைத்த சம்பவம்!

ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் ஏர்மாட்டி மங்கம்மா (74) மற்றும் ஏர்மாட்டி ராஜா ராவ் (80) என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1962 ஆம் ஆண்டு திருமணம் ஆகி உள்ளது. அன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை பாக்கியம் இல்லாததால் பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குண்டூரில் உள்ள தனியார் கருத்தரித்தல் மையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு மங்கம்மாவிற்கு பரிசோதனை செய்ததில், சர்க்கரை, நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற எந்தவித நோயும் இல்லாததால் குழந்தை பெறுவதற்கான சாத்தியம் ஓரளவுக்கு இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு மரபணு சோதனையும் நடத்தப்பட்டது. அதிலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு என கூறியிருக்கின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய் நின்று விடுவதால், அதனை பரிசோதனை மூலம் திரும்பக் கொண்டுவந்து மங்கம்மாவிற்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதன் பலனாக இவர்களுக்கு தற்போது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த தம்பதிகள் இருக்கின்றனர்.
இதுகுறித்து ராஜா ராவ் கூறுகையில், எங்களது சொந்த ஊரில் குழந்தை இல்லாததால் பல அவமானங்களை சந்தித்து வந்தோம். தொடர்ந்து கோவில்களுக்கும் பிரார்த்தனை செய்து வந்துள்ளோம். அவை எதுவும் பலனளிக்கவில்லை. தற்போது மருத்துவ உதவி யால் இது சாத்தியமாகியிருக்கிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம் என்றார்.