காக்கிநாடா: ஆந்திராவில் மாயமான 7 வயது பெண் குழந்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீப்தி எங்கமா போன..! 2 நாட்களாக தேடி அலைந்த உறவுகள்..! கடைசியில் வளர்ப்புத் தாயால் ஏற்பட்ட கொடூரம்! அதிர வைத்த சம்பவம்!

காக்கிநாடாவை சேர்ந்தவர் சாந்தகுமாரி. இவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் உள்ள ஒருவரை 2வது திருமணம் செய்துகொண்டார். அந்த நபரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைக்கு 7 வயது. தீப்திஸ்ரீ என பெயரிடப்பட்ட அச்சிறுமி, அருகாமை பள்ளியில் படித்து வந்தாள் எனினும், சாந்தகுமாரிக்கு முதல் தாரத்தின் வாரிசு உயிரோடு இருப்பது பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சொத்து பிரச்னை வரலாம் என்ற நோக்கில், சிறுமி தீப்திஸ்ரீயை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார்.
இதனால், சிறுமியை அவளது தந்தையும், பாட்டியும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து வளர்த்து வந்தனராம். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற சிறுமி தீப்திஸ்ரீ வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், அவளது தந்தை போலீசில் புகார் செய்தார். அத்துடன், சித்தி சாந்தகுமாரிதான் சிறுமியை எதோ செய்திருக்க வேண்டும் என, அவளது பாட்டியும் புகார் எழுப்பினார்.
இதையடுத்து, சாந்தகுமாரியை பிடித்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சிறுமியை அடித்து உதைத்து, தேவிப்பட்டிணம் பகுதியில் உள்ள பரிசல் நிறுத்துமிடத்தின் அருகே உப்பு தேரு கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டி வீசிவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதன்பேரில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் மேற்கொண்ட போலீசார், அங்குள்ள இந்திரபாலத்தின் அடியில் ஒரு சாக்குமூட்டை கயிற்றில் கட்டப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதனை நீரில் இருந்து மீட்டெடுத்து பார்த்ததில் சிறுமியின் சடலம் உள்ளே இருப்பது தெரியவந்தது. உடனடியாக, சாந்தகுமாரியை கைது செய்த போலீசார் இதுபற்றி விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.