61 ஆண்டு கால சாதனையை அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ந்திய வீரர் மயங்க் அகர்வால் தகர்த்துள்ளார்.
61 ஆண்டுகால சாதனை முறியடிப்பு! ஆஸியில் சாதித்த மயங்க் அகர்வால்!

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று மெல்பர்னில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அறிமுக வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் அனுமா விஹாரி ஆகியோர் களம் இறங்கினர். இருவருக்குமே இது தான் சர்வதேச அளவில் முதல் டெஸ்ட் போட்டி என்பது மிகுந்த கவனத்துடன் ஆடினர்.
ஆனால் அனுமா விஹாரி பதற்றத்தில் எட்டு ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த புஜாராவுடன் இணைந்து மற்றொரு வீரரான மயங்க் அகர்வால் நிதானமாக ஆடினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை மிகவும் லாவகமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். ஆஸி பந்த வீச்சாளர்களின் தவறான பந்துகளை ஷாட் அடித்து பவுண்டரிகளுக்கு விரட்டவும் அகர்வால் தவறவில்லை. இதனால் இந்திய அணியின் ரன் ரேட் சீரான வேகத்தல் உயர்ந்தது-
161 பந்துகளை எதிர்கொண்ட மயங்க் அகர்வால் 76 ரன்கள் எடுத்த போது ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிம் பைன் பந்து வீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். 8 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் அகர்வால் 76 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அறிமுக போட்டியில் களம் இறங்கிய இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்கிற சாதனையை அகர்வால் படைத்தார்.
இதற்கு முன்பு 1947ம் ஆண்டு இந்திய வீரர் தத்து பட்கார் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போது அவர் எடுத்த 51 ரன்கள் தான் ஆஸியில் இந்திய வீரர் ஒருவர் அறிமுகப் போட்டியில் எடுத்த அதிக ரன்னாக இருந்தது. இந்த நிலையில் அந்த சாதனையைத்தான் தற்போது சுமார் 61 ஆண்டுகளுக்கு பிறகு மயங்க் அகர்வால் முறியடித்துள்ளார். அவரை ஏராளமான வீரர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.