”தண்டி யாத்திரை நடந்த நாட்டில் 60,000 உப்பளத் தொழிலாளர்கள் அதோகதிதானா?”

உப்பு உற்பத்திக்கு எதிரான பிரிட்டன் தடங்கலை எதிர்த்து பெரும் மக்கள் போராட்டத்தை காந்தியடிகள் நடத்திய நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிரச்னை வெடித்துள்ளது.


”தமிழகத்தில் உப்பு உற்பத்தி நடைபெறும் வேதாரண்யத்தில் 2018 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 6 லட்சத்து 8 ஆயிரம் டன்னில் இருந்து 2019 இல் 2 லட்சத்து 85 ஆயிரம் டன்னாகவும், தூத்துக்குடியில் 14 லட்சம் டன்னில் இருந்து 10 லட்சம் டன்னாகவும், மரக்காணத்தில் 1 லட்சம் டன்னில் இருந்து 50 ஆயிரம் டன்னாகவும் உப்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.” என்று தமிழ்நாடு காங்கிரசு தலைவர் அழகிரி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.  

இன்றைய அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர், “ உப்புத் தொழிலைப் பொறுத்தவரை, தமிழகத்தில் ஏறத்தாழ 17,500 ஏக்கர் நிலம் மத்திய அரசின் குத்தகையின் கீழ் தொழில் நடைபெற்று வருகிறது. இதில் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

மத்திய அரசு இதற்கான குத்தகையை புதுப்பிக்க மாட்டோம் எனக் கூறியதன் காரணமாக பாதிக்கப்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடை உத்தரவு பெற்றுள்ளனர். அதுபோல, தூத்துக்குடியிலும் இதே நிலைமை ஏற்பட்டு இருப்பதால் அங்கேயும் தடை உத்தரவு பெற்றிருக்கிறார்கள்.” என்றும் கூறியுள்ளார். 

உப்பு வரியை எதிர்த்து பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் 388 கிமீ நடைபயணம் மேற்கொண்டு தடையை மீறி தண்டியில் காந்தியடிகள் உப்பை எடுத்ததை நினைவுகூர்ந்துள்ள அழகிரி, 

“ 90 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியடிகள் நடத்திய கடுமையான போராட்டத்தின் விளைவாக உப்புத் தொழில் இந்தியாவில் வளர ஆரம்பித்தது. அதில், குஜராத் மாநிலம் முதன்மை இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் முன்னிலைப் பங்கு வகித்து வந்தது. ஆனால், தற்போது மத்திய - மாநில அரசுகளின் தவறான கொள்கை மற்றும் அணுகுமுறைகளின் காரணமாக தமிழகத்தில் உப்பு உற்பத்தி கடந்த மூன்றாண்டுகளாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 

கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பின் போது எந்தவிதமான உதவியையும் மத்திய அரசும், மாநில அரசும் செய்யவில்லை. இதனால் உப்புத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கஜா புயலின் காரணமாக உப்புக் காய்ச்சுகிற நிலங்கள் சேற்றிலும், சகதியிலும் சிக்கி உப்புக் காய்ச்ச தகுதியற்ற நிலமாக மாறிவிட்டது.

இதை சீர் செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 40 ஆயிரம் தேவைப்பட்டது. இதுகுறித்து, உப்புத் தொழில் முனைவோர் மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் தலைமையில் விடுத்த கோரிக்கையை பரிவுடன் கவனிப்பதாகக் கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உப்பு செஸ் நிதியிலிருந்து உதவி செய்வதாக கூறியதும் நிறைவேற்றப்படவில்லை.

இத்தகைய காரணங்களால் தமிழகத்தின் சுயதேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உப்பு உற்பத்தி குறைந்ததால் குஜராத் மாநிலத்திலிருந்து கடந்த ஆண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் டன் உப்பு பெற வேண்டிய அவலநிலை தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. உப்பு உற்பத்தி குறைந்ததால் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் உப்பின் விலை ஒரு டன் ரூபாய் 800-லிருந்து ரூபாய் 1500 ஆக உயர்ந்திருக்கிறது. 

உப்பு உற்பத்தியாளர்களின் இத்தகைய அவலநிலைக்கு காரணம் குஜராத் மாநிலத்தில் வழங்கப்படுகிற சலுகைகள் எதுவும் தமிழகத்திற்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக மின்சார மானியம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு , தொழில் காப்பீட்டுத் திட்டம் போன்ற எவையும் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை. குறிப்பாக தமிழக அரசு உப்பு காய்ச்சுகிற தொழில் குறித்து எவ்வித அக்கறையையும் இதுவரை காட்டவில்லை. இவர்களது பிரச்சினை குறித்து பலதடவை முறையிட்டும் மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்த நிலையில் இருந்த தமிழகம் சுய தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் வெளி மாநிலத்தை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையை சரி செய்யாமல் மத்திய - மாநில அரசுகள் இதுவரை அலட்சிய அணுகுமுறையை கையாண்டு வந்தது. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது தமிழகத்தில் உப்பு உற்பத்தியை முழுமையாக அழித்து விடும்.

எனவே, தமிழகத்தில் அழிந்து வருகிற உப்புத் தொழிலை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசை அணுகி, உரிய தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.