ஸ்ரீபெரும்புதூர் அருகே விபரீதம்! விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் உள்ள விநாயகா நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, கழிவுநீர் தொட்டியின் அடியில் தேங்கிய கழிவை அகற்றுவதற்காக தொட்டியில் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி மயங்கினார்.


இதையடுத்து, அவரை காப்பாற்ற உறவினர்களான கண்ணன், கார்த்தி உதவிக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களும் மயங்கினர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பரமசிவம், லட்சுமிகாந்தன் என்பவர்கள் தொட்டியில் உள்ள 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது, அவர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 

கழிவுநீர் தொட்டியில் இறங்கிய சுதாபாய் என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், பாதுகாப்பு கவசங்களோடு கழிவு நீர் தொட்டியில் இறங்கி, விஷவாயு தாக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால், விஷவாயு கடுமையாக இருந்ததால், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

இதற்கிடையில், விஷவாயுவின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கழிவுநீர் தொட்டி ஜே.சி.பி இயந்திரம் கொண்டு மூடப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இயந்திரங்கள் அல்லாது மனிதர்களை கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி துப்புரவு பணியில் ஈடுபட்டதே 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.