செத்து அடக்கம் செய்து காரியத்தை முடித்த உறவினர்கள்! 13 நாட்களுக்கு பிறகு உயிரோடு வந்த மனிதர்! பீதியை கிளப்பும் சம்பவம்!

பீகார் மாநிலத்தில் தகனம் செய்யப்பட்ட ஒருவர் 13 நாட்களுக்கு பின்னர் உயிரோடு வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.


சினிமா, சீரியல்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக இறுதிச் சடங்குகள் செய்வார்கள். ஆனால் திடீர் என்று ஒருநாள் அவர் உயிரோடு வருவார். உடனே குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைவார்கள். அவர் சாகவில்லை, உயிரோடுதான் இருந்தார். தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என கடைசி வரை நம்பமுடியாத காரணத்தை திரைக்கதை இயக்குநர்கள் நமக்கு சொல்வார்கள். 

பீகாரில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 49 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதற்கிடையில் முசபாபர்பூரில் உள்ள கந்தக் ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க அது காணமல் போனவரின் சடலம்தான் என உறவினரால் அடையாளம் காணப்பட்டது.

பின்னர் அந்த சடலத்தை இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்யப்பட்டது. அந்த சடலத்தை தகனம் செய்த சரியாக 13 நாளில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர் வீட்டிற்கு வந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர்தான் யாருடைய உடலையோ நமது குடும்ப உறுப்பினர் என கருதி தகனம் செய்துவிட்டோம் என குடும்பத்தார் புலம்பித் தள்ளினர். இந்த குடும்பத்தாரால் தகனம் செய்யப்பட்ட நபரின் உடல் யாருடையது என்று இதுவரையில் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.