சுண்டிவிடப்படும் சில்லறை காசு! சிதறடிக்கப்படும் கவனம்! பேருந்து பயணிகளை குறி வைக்கும் விபரீத கொள்ளை கும்பல்!

பேருந்துகளில் ஒரு கொள்ளைக் கூட்ட கும்பலே பயணம் செய்வது போல் பொதுமக்களின் பணம், நகை, உள்ளிட்ட உடைமைகளை திருடி வந்த நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவன் சிக்கியுள்ளான்.


சதுரங்க வேட்டை சினிமா பாணியில் பொதுமக்களின் பணத்தை மறைமுகமாக சுரண்டுவது ஒரு வகை என்றால், பொதுமக்கள் கூடும் இடங்களில் நேரடியாக களத்தில் இறங்கி திருட்டில் ஈடுபடுவது இன்னொரு வகை. சாலையில் சில்லறைக் காசுகளை இருப்பதை பார்த்து அதை எடுக்கச் சென்று தான் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்தவர்கள் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானோர். 

வெளியூர் செல்லும் பேருந்துகளிலும் தன்னுடைய பைகளை பரணில் வைத்து விட்டு அஜாக்கிரதையாக இருந்ததால் உடைமைகளை தொலைத்தவர்களும் ஏராளம்.

அந்த வகையில் கோவையில் பேருந்துகளில் ஏறி சில்லறைக் காசுகளை சிதறவிட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபடும் குழுவின் தலைவன் தற்போது சிக்கியுள்ளான்.

கோவையை சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் அபினவ், தனது பட்டறையில் நகைகள் தயாரித்து அவற்றை வெளியூர், வெளிமாநிலங்களில் விற்று வருகிறார். ஜூன் மாதம் தன்னிடம் வேலை செய்யும் ரவிச்சந்திரன் என்ற வயோதிகரிடம் நகைகளைக் கொடுத்து சேலத்திலுள்ள நகைக்கடைகளுக்கு வழங்குமாறு கூறி அனுப்பிவைத்தார்.

அங்கு நகைக்கடைகளுக்கு கொடுத்தது போக மீதமிருந்த 116 சவரன் நகைகளை ரவிச்சந்திரன் கோவை திரும்பியுள்ளார். அப்போது தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது அவர் வைத்திருந்த 116 சவரன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந் நிலையில் ரவிச்சந்திரன் பயணம் செய்த தனியார் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நூதனமான ஒரு கும்பல் ரவிச்சந்திரன் வைத்திருந்த நகைகளை திருடிச் சென்றது அம்பலம் ஆனது.. 5 பேர் கொண்ட அந்த கும்பல் பேருந்தில் ரவிச்சந்திரன் அருகில் அமர்ந்து அவர் இருக்கும் இடத்தில் ஒரு நாணயத்தை போடுகிறார்கள்.

பின்னர் அதை எடுப்பது போல் பாவனை செய்ய ரவிச்சந்திரன் அருகில் அமர்ந்திருக்கும் ஒருவன் நைசாக அவரது பையில் இருந்து நகைகளை எடுத்துக் கொள்கிறான். நகைகள் திருடப்பட்ட பின் ஒவ்வொருவராக பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று விடுகின்றனர். இந்தக் காட்சிகள் தெளிவாக பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் தெரிகிறது.

அந்தக் காட்சிகளை நேற்று போலீசார் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் கொள்ளைக் கூட்ட கும்பலின் தலைவன் மலைச்சாமியை கைது செய்தனர். பின்னர் அவரது கூட்டாளிகளான வீரபாண்டி, சீனிவாச பாண்டியன் கைதாகினர். மற்றவர்கள் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மலைச்சாமியிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் இருப்பதும் மலைச்சாமி ஏற்கனவே 2முறை குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.

விலை உயர்ந்த பொருட்கள் பேருந்தில் கொண்டு செல்லும்போது மிக கவனமாக இருப்பது அவசியம் ஆகிறது. கால் டாக்சி பணத்தை மிச்சப்படுத்த பேருந்துகளில் பயணம் செய்யும்போது இதுபோன்று லட்சக்கணக்கில் இழக்க நேரிடுகிறது. சில சிமயங்களில் விலை உயர்ந்த நகைகளை பத்திரமாக கொண்டு செல்வதற்குள் விலை மதிப்பற்ற உயிரும் கொள்ளைக் கூட்ட கும்பல்களால் போய்விடுகிறது.