35 வயசு வரை தான் இளைஞர் அணி ! இதை சொன்னது 41 வயசு உதயநிதி! ஹில்டன் ஹோட்டல் காமெடிகள்!

இன்று ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற மாநில இளைஞர் அணிக் கூட்டத்தில், திமுக மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் என மொத்தம் 474 பேர் பங்கேற்றனர்.


இந்தக் கூட்டத்தில் இளைஞர் அணியினருக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டதாக உதயநிதி அறிவித்தார். இதோ சில முக்கிய தீர்மானங்கள்

அதன்படி,  15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது என்பதையும் இக்கூட்டம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இருவரின் பிறந்தநாளினையொட்டி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நம் இளைஞர் அணி பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதேபோல, மார்ச் 1 - இளைஞர் எழுச்சி நாளான நம் தலைவரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக  இளைஞர்களை ஊக்குவிக்க மாவட்ட - மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் அணியின் சார்பில் நடத்தப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிக்குள்ளான 2 மாதங்களுக்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்குக் குறையாமல் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என நம் நிர்வாகிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது இந்தக் கூட்டம்.

தூர்வாரப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் நீர்நிலைகள், அதிக பிளாஸ்டிக் பயன்பாடுகள்... இப்படியான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க நம் தி.மு.க இளைஞரணி இனி அதிக கவனம் செலுத்தும். இதை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நம் கழகத்தின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையிலும், நம் கழக அரசின் சாதனைகளை அவர்களுக்கு  விளக்கும் வகையிலும், இயக்க முன்னோடிகளைக் கொண்டு மாவட்டந்தோறும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்பதையும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

நம் இளைஞரணி அமைப்பு மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படும். அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு மிகாமல் ஒரு மண்டல மாநாடு நடத்தப்படும். அனைத்து மண்டல மாநாடுகளும் முடிந்தபின், மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடத்தப்படும் என்பதையும் இக்கூட்டம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறது.

லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையிலும், இன்னும் பல லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும்நிலையிலும், தமிழகத்திலுள்ள அஞ்சல், இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளை வட மாநிலத்தவர்களுக்கு வாரி வழங்கும் துரோகத்தை மத்திய அரசு செய்துவருகிறது.

இதற்கு அ.தி.மு.க அரசும் துணை போகிறது. இந்த துரோகச் செயல்களைச் செய்யும் மத்திய, மாநில அரசுகளை இளைஞர் அணியின் இந்த நிர்வாகிகள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்பில் - தமிழருக்கு முன்னுரிமை வழங்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ஃபோர்டு, நிஸான், ஹூண்டாய்... போன்ற பன்னாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்ற நற்பெயரை பெற்றுத் தந்தது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க ஆட்சி.

இன்று ஆளும் அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் லாபகரமாக தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் வேலை இழக்கும் சூழலும் நிலவுகிறது. இந்நிலையை ஏற்படுத்திய மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.