மசூதிக்குள் 49 பேரை சுட்டுக் கொன்ற இனவெறியன்! துப்பாக்கிச் சூட்டை பேஸ்புக்கில் லைவ் செய்த கொடூரம்!

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த கிரிக்கெட் அணியினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளதாக கிரிக்கெட் வீரர் ட்விட்டரில் தகவல்.


நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஹாக்லே பார்க் என்ற இடத்தில் இருந்த இரண்டு மசூதிக்குள்  இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த வங்கதேச கிரிக்கெட் அணியினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளதாக கிரிக்கெட் வீரர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்ச்சூடு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு இருப்பவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

9க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாகவும் நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கதேசம் கிரிக்கெட் வீரர் முகமது இசாம், இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், வங்கதேசம் அணி முழுவதுமாக துப்பாக்கிச் சூடு நடந்த ஹாக்லே பார்க்கில் இருந்து  ஓவல் என்ற இடத்திற்கு ஓடி தப்பித்து உயிர்பிழைத்ததாகவும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதல் குறித்து அறிந்த நியூசிலாந்து பிரதமர் ஜேசிண்டா ஆர்ட்ரன், “நியூசிலாந்து வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாக மாறியுள்ளது. மசூதிக்குள் வழிபாடு நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும்” என்றார்.

நியூசிலாந்து: கிறிஸ்ட்சர்ச் துப்பாக்குச்சூடு காரணமாக  நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தாக்குதலில் இந்தியர்கள் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து நியுசிலாந்தில் வாழும் இந்தியர்கள் 9 பேர் குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்கிற விவரமும் தெரியவரவில்லை. இதனை அடுத்து அவர்கள் ஒன்பது பேரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.