அதிவேக தண்ணீர் லாரி! மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட தாய் கண் முன்னே சிதைந்த 4 வயது சிறுவன்! பதற வைக்கும் சம்பவம்!

தாயின் கண் முன்னே தண்ணீர் லாரியில் அடிபட்டு 4 வயது சிறுவன் இறந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வளசரவாக்கத்தில் அன்பு நகர் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியின் 9-வது தெருவை சேர்ந்தவர் சையத். சையத்தின் மனைவியின் பெயர் நஸ்ரின். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகனின் பெயர் முகமது உவைஸ். 4 வயது சிறுவனான இவன் தனியார் பள்ளியில் படித்து வந்தான். 

வழக்கமாக அவனை நஸ்ரின் தன் மொபட்டில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று பள்ளி முடிந்தவுடன் ஆறாவது தெரு வழியாக அவனை நஸ்ரின் மொபட்டில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியே வந்த தண்ணீர் லாரியொன்று அதிவேகமாக வந்து நஸ்ரினின் மொபட் மீது மோதியது. மோதிய அதிர்ச்சியில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது முகமதின் தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நஸ்ரின் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தன் கண்முன்னே தன் மகன் இறந்ததை கண்டு நஸ்ரின் கடுமையாக அழுதார். ஆனால் லாரி ஓட்டுனர் லாரியை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்து ஓட்டுநரை சரமாரியாக அடித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாண்டிபஜார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஓட்டுனரை கைது செய்து காவல் நிலையத்தில் சிறையிலடைத்தனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.