பாரதிராஜா பஞ்சாயத்தினால் இயக்குனர்கள் சங்க தலைவர் பதவிக்கு நாலு பேர் குஸ்தி!

நடிகர் சங்கத் தேர்தலை தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலும் தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


போட்டியின்றி பாரதிராஜா தலைவராக தேர்வு செய்யும் விவகாரம் சிக்கலாகிப் போனதால், இப்போது நான்கு பேர் போட்டியில் நிற்கிறார்கள். இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒன்றுகூடி இயக்குநர் பாரதிராஜாவைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர். இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ஜூலை 14ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை 21ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான எதிர்ப்பும் சங்கத்துக்குள் எழுந்தன. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டோர் இதை விமர்சித்திருந்தனர். இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர்கள் சங்க பொதுக்குழுவுக்குப் பெரும்பாலும் வராதவர் பாரதிராஜா என விமர்சித்தார்.

உடனே பாரதிராஜாவும், ‘தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரைத் தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்’ என்று விளக்கமளித்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா செய்துவிட்டு பாரதிராஜா தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒதுங்கியிருக்கப் போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது தலைவர் பதவிக்கான போட்டியில் இயக்குநர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர். எப்படியோ பாரதிராஜாவை விரட்டியாச்சு என்று ஒரு குரூப் பார்ட்டி வைத்து கொண்டாடினார்களாம்.