சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னர் 36 பெண்கள் சபரிமலை தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி! சபரிமலை தரிசனத்திற்கு 36 பெண்கள் முன்பதிவு! கேரளாவில் பரபரப்பு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஞாயிறு முதல் மகரஜோதி மண்டல பூஜை துவங்க உள்ளது .இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக உலகெங்குமுள்ள பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருவது வழக்கம்.
அந்த வகையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு 7 நீதிபதிகள் கொண்ட அவைக்கு மாற்றப்பட்டுள்ளது .மேலும் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை அடுத்து சபரிமலை ஐயனை தரிசிப்பதற்காக 36 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்தப் பெண்களை ஐயனை தரிசிக்க கேரள அரசு அனுமதிக்குமா மற்றும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்குமா? எனும் கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த தீர்ப்பை முன்வைத்து தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு உச்சநீதிமன்றத்தின் முடிவு குறித்து பேசுகையில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது .மேலும் நீதிமன்றம் பக்தர்களுடைய நம்பிக்கையை காப்பாற்றும் என நம்புகிறோம் என்றும் கூறினார்.