10 கோடி கிரெடிட் கார்டு டேட்டாஸ் திருட்டு! அமெரிக்க போலீசையே மிரள வைத்த இளம் பெண் என்ஜினியர்!

நியூயார்க்: 10.6 கோடி கிரெடிட் கார்டு பயனாளர்களின் விவரத்தை திருடிய பெண் ஒருவர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை சேர்ந்த பெய்ஜ் தாம்சன் என்ற 33 வயது பெண்மணி, சாஃப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிகிறார். இந்த பெண், தனது கணினி திறமையை காட்டும் வகையில், அமெரிக்காவின் பிரபல கிரெடிட் கார்டு சேவை நிறுவனமான கேபிடல் ஒன் வாடிக்கையாளர்கள் 10.60 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை திருடியுள்ளார்.

இதுபற்றி ஹிட் கப் என்ற சமூக வலைதளத்தில் தற்பெருமை அடித்துக் கொண்ட பெய்ஜ் தாம்சன் பற்றி ஒருவர் கேபிடல் ஒன் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார். உடனடியாக இதுபற்றி எஃப்பிஐ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெய்ஜ் தாம்சனை கைது செய்தனர்.

அவரிடம் இருந்த தகவல் திருட்டு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். எனினும், அவர் தனிப்பட்ட விவரங்களை திருடினாரே ஒழிய கிரெடிட் கார்டின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட எதையும் திருடவும் இல்லை. பணம் எடுக்கவும் முயற்சிக்கவில்லை.

கிரெடிட் கார்டு பயனாளர்களின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை மட்டுமே திருடியிருக்கிறார். இருந்தாலும், அவரது செயலை கண்டித்து, தற்போது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.  அந்த பெண்ணிற்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.