நான் தான உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்! அதுனால..? நண்பனிடம் கேட்க கூடாததை கேட்ட இளைஞன்! பிறகு அரங்கேறிய 3 கொலைகள்!

சேலம்: வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும், உள்ளூரை சேர்ந்தவர்களும் பணிபுரிகின்றனர். இதில், ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ் என்பவர்  தனது மனைவி வந்தனா குமாரியுடன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையையும்  கூடவே வைத்து பராமரித்து வரும் ஆகாஷ், தனது உறவினரான சன்னி குமார் என்ற சிறுவனையும் அழைத்து வந்து பட்டறை வேலையில் சேர்த்துள்ளார்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆகாஷ் தங்கியிருந்த வீட்டில் அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடப்பதாக, இரும்பாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில்,  ஆகாஷின் நண்பர் வினோத் உள்ளிட்ட சிலர் சம்பவத்தன்று அப்பகுதியில் தப்பியோடும் காட்சிகள் இடம்பெற்றதை கண்டறிந்தனர்.  

அவற்றின் அடிப்படையில் சேலம் முழுக்க தீவிர தேடுதல் மேற்கொண்ட போலீசார், பிறகு கொலையாளிகளின் செல்ஃபோன் எண்ணை வைத்து தேடுதல் மேற்கொண்டனர்.  அப்போது அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு தப்பியோடிய விவரம் தெரியவந்தது. உடனடியாக, பாலக்காடு விரைந்த தனிப்படை போலீசார், அங்கு ரயிலில் சுற்றிக் கொண்டிருந்த  வினோத், அஜய், சுராஜ் ஆகியோரை கைது செய்தனர்.  

விசாரணையில் அவர்கள் திடுக்கிடும் உண்மையை வெளியிட்டனர். ஆம், நேற்று முன்தினம் இரவு இவர்கள் ஆகாஷின் வீட்டின் அருகே மது அருந்தியுள்ளனர். பின்னர், ஆகாஷின் மனைவி வந்தனா குமாரியை  பலாத்காரம் செய்யும் வெறியுடன் அவரது வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஆனால், வந்தனா குமாரி கூச்சல் போடவே, அவரது கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர், தடுக்க வந்த ஆகாஷ், சன்னி குமார் ஆகியோரையும்  கழுத்தை அறுத்துக் கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.   இவர்களின் மதுவெறியில், 3 உயிர்கள் பறிபோனதுடன் ஒரு பிஞ்சு குழந்தை அனாதையாகிவிட்டது.