கல்யாணம் பண்ணி வைக்க மாட்றாங்க! பெற்றோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த இளைஞர்!

உத்தரப் பிரதேசத்தில் 26 வயது இளைஞர் தனக்கு திருமணத்துக்கு பெண் தேடித் தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கய்ரானா என்ற இடத்தைச்சேர்ந்தவர் அசீம் மன்சூரி. இவரது உயரம் 2 அடி 3 அங்குலம். இவர் இன்னும் மனதளவில் குழந்தை போல இருப்பதாலும், வேறு சில குறைகளும் இருப்பதாலும் இன்னும் பெண் கிடைக்கவில்லை என்கிறார் இவரது  தந்தை நசீம் மன்சூரி. ஆனால் தனக்கு திருமணம் செய்து வைக்காத தனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அசீமின் புகாரையடுத்து போலீசார் அசீமின் வீட்டுக்குச் சென்றனர். போலீசார் தன் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், 2 மாதங்களில் தனக்கு பெண்ணைத் தேடி திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தியதாகவும் கூறுகிறார் அசீம். முடியாத பட்சத்தில், பெண்ணைத் தேட போலீஸாரே உதவுவதாகச் சொல்லியிருப்பதாகவும் கூறினார்.

திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தைத் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை அசீமுக்கு அதிகமாகவே இருப்பதாக தெரிவித்த போலீசார், வரப்போகும் ரம்ஜான் நோன்பைத் தன் மனைவியுடன் கடைப்பிடிக்கும் கற்பனையுடன் அசீம் இருப்பதாகக் கூறினர். 

டிசம்பர் மாதம், உறவினர் ஒருவர் திருமணத்துக்காக லக்னோ சென்ற அசீம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை சந்தித்து, இதே புகாரைக் கொடுத்ததும், அகிலேஷும் பெண்ணைத் தேடித் தர உறுதியளித்ததும் கூடுதல் சுவாரசியம்.