வீட்டு வேலைனு சொன்னாங்க..! விபச்சாரம் செய்ய சொல்றாங்க..! மனைவிக்கு ஏற்பட்ட நிலை குறித்து கலங்கும் கணவன்!

வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு என அழைத்து செல்லப்பட்ட ஏராளமான பெண்கள் அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


இந்த சம்பவத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சிக்கிக் கொண்ட மனைவியை மீட்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ராஜி என்பவர் மனு அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் ராஜி என்பவரின் மனைவி குடும்ப வறுமைக் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் குவைத் நாட்டிற்கு சென்று உள்ளார்.

ஆனால் அங்கு அவருக்கு வேலை தராமல் ஒரு அறையில் 25 பெண்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களை ஆபாசமாக படம் எடுப்பதாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனுவில் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பிய தரகர் சுதாகர் என்பவரிடம் தொடர்பு கொண்ட கேட்டபோது 2 லட்ச ரூபாய் தந்தால்தான் மனைவியை விடுவிப்பேன் என மிரட்டுவதாகவும் ராஜி கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். ராஜி என்பவருக்கு 3 குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாமல் வறுமைக் காரணமாக மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பியதாகவும் தற்போது மனைவியையும் மீட்க பணம் இல்லாமல், குடும்பத்தையும் காப்பாற்ற முடியாமலும் அவஸ்தை படுவதாகவும் எனவே மத்திய அரசு மூலம் மனைவியை மீட்டுத் தரவேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார் ராஜி. இவரைப்போல் எத்தனைப் பேர் மனைவிகளை தொலைத்து விட்டு மனுக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களோ?