போடாத சாலைக்கு ரூ.24 லட்சம் பில்! கிணத்தை காணோம் ஸ்டைலில் சாலையை காணோம் என மக்கள் புகார்! மதுரை சம்பவம்!

போடப்படாத சாலைக்கு 24 லட்ச ரூபாய் செலவழிக்க பட்டுள்ளதாக வெளியான தகவல் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் பழங்காநத்தம் என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட சாய்நகர் எனும் இடத்தில் சாலை போடப்பட்டதற்கான தகவல்களை மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிந்துள்ளார்.

அதில் போடப்படாத சாலைக்கு 24 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது தகவல்கள் கிடைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த கணக்கானது 2012-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது மோகனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015-ஆம் ஆண்டில் புதிய சாலை குறித்த தகவல்களை தகவலறியும் சட்டத்தின் மூலம் கேட்டறிந்துள்ளார். அப்போது இந்த சாலை கடைசியாக 2008-ஆம் ஆண்டில் போடப்பட்டது என்றும் அதன்பின் எந்த ஒரு பராமரிப்பும் இந்த சாலைக்கு நடத்தப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரே சாலையை பற்றி இருவேறு விதமாக தகவல்கள் கிடைத்துள்ள சம்பவமானது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.