நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார்.
எல்லாம் தளபதி தான்..! பாமக வேட்பாளரை மண்ணை கவ்வ வைத்த 22 வயது இளம் பெண் ஒன்றிய கவுன்சிலர்! சேலம் சுவாரஸ்யம்!

அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் ப்ரீத்தி மோகன் என்பவர் போட்டியிட்டார். 22 வயதான இவர் தொலைநிலைக் கல்வி மூலம் எம் ஏ ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். இந்த தொகுதியில் பாமக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ப்ரீத்தி மோகன் 1053 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இதுபற்றி பேட்டி ஒன்றில் பேசிய அவர், திமுகவின் ஆரம்ப காலங்களிலிருந்தே என்னுடைய மாமனார் சக்கரவர்த்தி திமுகவில் இருந்து வருகிறார். இதனால் எனக்கும் திமுகவின் மீது ஈர்ப்பு அதிகமாகியது. ஆகையால் நானும் திமுக கட்சியில் இணைந்து பல கட்சி நற்பணிகளை செய்து வந்தேன். இந்நிலையில்தான் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது.
இதனால் அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டேன். மக்களின் ஏகோபித்த ஆதரவால் எதிர் கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றேன். திமுக தலைவர் ஸ்டாலினை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.
மக்களின் அனைத்து தேவைகளையும் அறிந்து தலைவர் ஸ்டாலின் வழியிலேயே நான் மக்களுக்கு நல்லது செய்வேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் ஆளும் அதிமுக எந்த ஒரு நற்பணிகளையும் மற்றும் அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நான் அப்படி இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் அறிந்து அதை பூர்த்தி செய்வேன் எனவும் பிரீத்தி மோகன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.