டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்! மணிக்கு 215கிமீ வேகம்..! திடீரென சைக்கிளுடன் குறுக்கே வந்த முதியவர்..! பிறகு நடந்தது?

215 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென ஒருவர் வந்ததால் அடுத்த வினாடியே வண்டியை நிறுத்தும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.


மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டிச் செல்லும் நபர் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறார். சாலை காலியாக இருந்ததால் அதிகபட்சமாக அவர் 200 கிலோ மீட்டர் வேகத்தை தனது பைக்கை இயக்குகிறார். பின்னர் படிப்படியாக 215 கி.மீ. வேகத்தில் பறக்கிறார் அந்த மனிதர்.

அப்போது ஒரு நபர் திடீரென தனது சைக்கிளுடன் சாலையை கடக்கிறார். இதனால் பரபரப்பு ஏற்படுகிறது. பைக்கை ஓட்டிச் செல்லும் நபர் சடன் பிரேக் அடிக்கிறார். ஒருவேளை ஏபிஎஸ் இல்லாத பைக்காக இருந்திருந்தால் விபத்து ஏற்பட்டு அந்த நபர் உயிரிழந்திருப்பார். ஆனால் இந்த டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கில் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. எனவே அவர் பிரேக் பிடித்த அடுத்த வினாடி 215ல் இருந்து 175 கிலோ மீட்டராக வேகம் குறைகிறது. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு பாதுகாப்பாக நின்றுவிடுகிறது.  

125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தாலும், அதிவேகத்தில் பைக்கை ஓட்டும்போது என்னவிதமான ஆபத்துகள் திடீரென வரும் என சொல்ல முடியாது. சாலையை கடக்கும் பாதசாரிகள் அல்லது கால்நடைகள் திடீரென வாகனத்தின் குறுக்கே வந்தால் ஆபத்துதான். எனவே வேகக் கட்டுப்பாடு முக்கியம். மேலும் உங்களைப்போல மற்ற வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.