2.0 விமர்சனம்! ரஜினியை வைத்து ஷங்கர் எடுத்துள்ள சயின்டிஃபிக் பேய் படம்!

இந்திய மதிப்பில் சுமார் 450 கோடி ரூபாய் செலவு செய்து 3 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகு வெளியாகியுள்ள 2.0 திரைப்படத்தின் நேர்மையான விமர்சனம் இது.


கதை

   செல்போன் கதிர்வீச்சால் பறவைகள் பாதிக்கப்பட்டு செத்து மடிவதை பார்த்து பறவைகள் மீது தீராத காதல் கொண்ட ஒருவர் செல்போன் நிறுவனங்களுக்கு எதிராக போராடுகிறார். ஆனால் செல்போன் நிறுவனங்களை அந்த பறவைகள் ஆர்வலரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனது வீட்டுக்கு அருகேயே செல்போன் டவர் வைக்கப்பட்டதால் அவர் ஆசை ஆசையாய் வளர்த்த பறவைகள் செத்து மடிகின்றன. இதனை பார்க்க சகிக்காமல் அந்த பறவைகள் ஆர்வலர் செல்போன் டவரிலேயே தூக்கு போட்டு செத்துவிடுகிறார்.

   இதன் பிறகு அந்த பறவைகள் ஆர்வலர் உடலில் இருந்து வெளியாகும் ஆவி (ஷங்கர் இந்த ஆவியை ஆரா என்று அறிவியல்பூர்வமாக குறிப்பிடுகிறார். ஆனால் நம் ரசிகர்களுக்கு அது ஆவி தான்) சக பறவைகள் ஆவியுடன் சேர்ந்து முதலில் செல்போன் விற்பவரையும், பிறகு செல்போன் சேவை  வழங்கும் நிறுவன முதலாளியையும் போட்டுத்தள்ளுகிறது. ஆனாலும் செல்போன் பயன்பாடு குறையாத காரணத்தினால் செல்போன் பயன்படுத்தும் மக்களையே கொலை செய்ய முடிவு எடுக்கிறது அந்த பறவைகள் ஆர்வலரின் ஆவி.

   அந்த பறவைகள் ஆர்வலரின் ஆவியிடம் இருந்து ரஜினி எப்படி மக்களை காப்பாற்றுகிறார் என்பது தான் 2.0 கதை.



திரைக்கதை

   படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயின்ட் திரைக்கதை தான். துவக்கம் முதல் கடைசி வரை படம் மின்னல் வேகத்தில் செல்கிறது. லாஜிக் பற்றியெல்லாம் எந்த கவலையும் படாமல் ஷங்கர் சூப்பராக ஒரு கதை சொல்லியிருக்கிறார். பறவைகள் எந்த அளவிற்கு மனிதர்களுக்கு தேவை என்பதை ஐந்து நிமிடங்கள் மெனக்கெட்டு ஷங்கர் கூறியிருப்பதை பாராட்டலாம்.

   பறவைகள் ஆர்வலரின் ஆவி மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் ராணுவத்தால் கூட அழிக்க முடியவில்லை. இதனால் எந்திரன் படத்தில் வரும் சயின்டிஸ்ட் ரஜினி அந்த படத்தில் வரும் சிட்டியை மீண்டும் உருவாக்குகிறார். சிட்டி அந்த ஆவியை அடித்து துவைத்து சரண் அடைய வைத்துவிடுகிறது. ஆனாலும் அந்த ஆவி மீண்டு எழுந்து வந்த செல்போன் பயன்படுத்தும் மக்களை ஒட்டு மொத்தமாக கொல்ல திட்டம் போடுகிறது. அந்த திட்டத்தை சயின்டிஸ்ட் ரஜினியும் சிட்டி ரஜினியும் சேர்ந்து முறியடிப்பது மீதிக்கதை.

பிளஸ் பாயின்ட்

   படத்தில் ஏராளமான பிளஸ் பாயின்ட் உள்ளது. ஆனாலும் ரஜினி தான் படத்தை தூக்கி நிறுத்துகிறார். அதுவும் சிட்டி ரஜினி ஸ்க்ரீன் பிரசன்ஸ் அள்ளுகிறது. சிட்டி வரும் ஒவ்வொரு சீனும் விசில் பறக்கிறது. காட்சி அமைப்புகளும் கூட ரஜினியை உச்சத்தில் வைப்பது போல் இருப்பது ரசிகர்களுக்கு விருந்து. பறவைகள் மீது தீராக்காதல் கொண்டவராக வரும் அக்சய் குமாரும்  செமி வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அக்சய் குமாருக்கு தமிழில் வாய்ஸ் கொடுத்துள்ள ஜெயப்பிரகாசை பாராட்டிய தீர வேண்டும். இசை அமைப்பாளர் ரகுமானை பொறுத்தவரை எந்திரன் படத்தின் மியூசிக்கை பட்டி டிங்கரிங் பார்த்து மேனேஜ் செய்துள்ளார். அதுவும் கூட நன்றாகவே உள்ளது.

  பாடல்கள் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல்.



நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு சென்னையை வேறு ஏதோ ஒரு பிரமாண்ட நகராக காட்டியுள்ளது. ஷங்கர் இயக்கம் வழக்கம் போல் பிரமாண்டம். 2.0 படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் 3Dல் பாருங்கள். அவ்வளவு அருமையாக த்ரீ டி வொர்க் செய்துள்ளார்கள். காட்சிகள் அனைத்துமே நம் கண் முன்னால் விரிவது போல் உள்ளது.

   கிளைமேக்சில் ரஜினி சுடும் ஒவ்வொரு குண்டும் உங்கள் கண்களை நோக்கி வரும் போது கண்களை மூடிக் கொள்வது நிச்சயம். நிச்சயமாக இந்த படத்தை குழந்தைகள் விரும்புவார்கள். எனவே அவர்கள் அம்மா, அப்பாவை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு செல்லும் போது வசூல் நிச்சயம் சாதனைகளை படைக்கும்.

கிராபிக்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளை தவிர மற்றவை அனைத்துமே ஹாலிவுட் தரம். நிச்சயமாக இந்தியாவில் ஹாலிவுட் தரத்தில் வந்துள்ள முதல் படம் 2.0. பாகுபலியை மிஞ்சும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தியிருப்பது பிரமிக்க வைக்கிறது.

மைனஸ் பாயின்ட்

   என்ன தான் சயின்டிபிக் த்ரில்லராக பல்வேறு விளக்கங்களை கூறி படத்தை எடுத்தாலும் இது கிட்டத்தட்ட ஒரு பேய் படத்தின் கதையை போல் தான் உள்ளது. எனவே தான் படம் எவ்வளவு பிரமாண்டமாக இருந்தாலும் படம் முடிந்த பிறகு பெரிய அளவில் ஒரு ஆச்சரியமும் ஏற்படவில்லை.  வழக்கமாக ரஜினி பேசும் பன்ச் டயலாக்குகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது அவரது ரசிகர்களுக்கே ஏமாற்றம் தான்.



  படத்தில் ரஜினி தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே மிகவும்அன்னியமாக உள்ளது. அதிலும் அமைச்சர்களாக வருபவர்கள், சயின்டிஸ்டாக வருபவர்கள், செல்போன் கடை உரிமையாளர்களாக வருபவர்கள் என யாருமே மனதில் ஒட்டவில்லை. படத்தில் ரஜினியை தவிர வேறு யாரும் யாருக்கும் தெரியாது. எமி ஜாக்சனும் கூட ரோபோ என்பதால் நமக்கு அவரை பார்க்கும் போதும் ரோபோ பீலிங் தான் வருகிறது.

படம் பார்க்கலாமா?

   தமிழில் ஒரு பிரமாண்ட படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யோசிக்காமல் குடும்பத்துடன் தியேட்டருக்கு செல்லலாம். இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்கு நிச்சயம்.