வரலாற்றில் முதல் முறை! விலை போகாத ரஜினி படம்! அறிவித்தபடி 2.0 வெளியாகுமா?

தயாரிப்பாளர் மிகப்பெரிய தொகையை விலையாக கூறுவதால் 2.0 படத்தை வாங்க தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் தொடர்ந்து தயங்கி வருகின்றனர்.


   இந்திய திரையுலகிலேயே மிக அதிக பொருட் செலவில் 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. தமிழகத்தில் ரஜினியை நம்பியும், இந்தியில் அட்சய் குமாரை நம்பியும் லைக்கா நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் வரை இந்த படத்தில் முதலீடு செய்துள்ளது. சுமார் ஓராண்டு கால கிராபிக்ஸ் பணிகள் முடிந்து படம் வரும் 29ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, இந்தி என அனைத்து ஏரியாக்களிலும் லைக்கா நிர்ணயித்த விலையில் விநியோகஸ்தர்கள் வாங்கிச் சென்றுவிட்டனர்.

   மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதாலும் ரஜினி – ஷங்கர் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியுடன் அக்சய் குமாரும் இணைந்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே வழக்கமான ரஜினி படத்தை விட கூடுதல் விலைக்கு மற்ற மாநிலங்களில் 2.0 விலை போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் தான் படம் தற்போது வரை விநியோகஸ்தர்கள் வசம் செல்லாமல் உள்ளது.

   படத்திற்கு லைக்கா நிறுவனம் கூறும் ரேட் தான் விநியோகஸ்தர்களை தயங்க வைத்துள்ளது. வழக்கமாக சென்னை ஏரியா 17 கோடி ரூபாய்க்கு செல்லும் நிலையில் சுமார் 25 கோடி ரூபாய் வரை லைக்கா கேட்பதாக கூறப்படுகிறது. இதே போல் தான் சேலம், கோவை, திருச்சி, மதுரை, வட ஆர்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் தயாரிப்பாளர் சொல்லும் ரேட் விநியோகஸ்தர்களை யோசிக்க வைத்துள்ளது.

   இதனால் 2.0 படத்தை விநியோகஸ்தர்களுக்கு சென்னையில் பிரத்யேக காட்சியாக லைக்கா போட்டுக் காட்டியுள்ளது. இதே பாணியில் தான் இந்தியில் 2.0 படத்தை விநியோகஸ்தர் கரண் ஜோகருக்கு போட்டுக் காட்டி கூடுதல் விலைக்கு லைக்கா தள்ளியது. படத்தை பார்த்த பிறகாவது தாங்கள் கூறும் ரேட்டுக்கு படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள் என்கிற நம்பிக்கையில் சென்னையில் படத்தை போட்டுக் காட்டியுள்ளனர்.

   படம் மிக பிரமாண்டமாக சிறப்பாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். ஆனால் லைக்கா கூறும் தொகையை வசூலாக எடுக்க முடியுமா? என்பதில் அவர்களுக்கு சந்தேகம் நிலவுகிறது. இதனால் தற்போது வரை 2.0 தமிழகத்தில் வியாபாரம் ஆகவில்லை. எனவே திரையரங்குகளும் 2.0 படத்திற்காக புக்கிங் செய்யப்படாமல் உள்ளது. மேலும் ரிசர்வேசனும் தொடங்கவில்லை.

   இதனால் திட்டமிட்டபடி வரும் 29ந் தேதி 2.0 திரைப்படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என்றால் லைக்காவே சொந்தமாக ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.