திருவள்ளூர்: சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற நாய்! பிறகு நேர்ந்த அதிசயம்!

திருவள்ளூர் அருகே பிறந்த ஒரிரு நாட்களே ஆன ஆண் குழந்தை பையில் வைத்து அடைத்து கால்வாய் அருகே வீசி சென்றுள்ளதை அடுத்து அங்கிருந்த நாய்கள் அந்த பையை கடித்து குதறிய கொடூரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே நேற்று  டீக்கடை அருகில் ஒரு டிராவல் பையையை சுற்றி வளைத்த நாய்கள் கூட்டம் அந்த பையை கடித்து குதறுவதை கவனித்த திருநங்கை ஒருவர் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு சுதாரித்து கொண்டு, அங்கிருந்தவர்கள் உதவியுடன் நாய்களை விரட்டி விட்டு பையை திறந்து பார்த்த போது உள்ளே வேப்பிலையால் சுற்றி வைக்கபட்ட நிலையில் உயிருடன் கதறி அழுத குழந்தையை மீட்டனர்.

குழந்தையை உடனடியாக அருகில் இருந்த ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர், பின்னர் இது குறித்த தகவல் அறிந்த போலீசார் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்குள் குழந்தைபெற்ற யாரேனும் மாயாமாகியுள்ளனரா என்ற கோணத்தில் அனைத்து மருத்துவமனையிலும் தகவல் கொடுத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

மேலும் இந்த விசாரணை மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரி, குழந்தையை அடுத்தகட்டமாக தமிழக அரசின் சார்பில் இயங்கும் தொட்டில் குழந்தை திட்டத்தின் அடிப்படையில் ஒப்படைக்கவுள்ளதாகவும் , இதன் மூலம் குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த குழந்தையை எதிர்காலத்தில் தத்து எடுத்து நல்ல வாழ்வு கிடைக்க உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.