2018 சிறந்த வில்லன் விருது இவருக்குத்தான்..!

டைம்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக இரண்டாவது ஆண்டாக சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2018ம் ஆண்டுக்கு விருதுபெறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. இந்த விருதுக் கலைஞர்களை தேர்வுசெய்யும் குழுவில் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.


தேர்வுக்குழுவினரால், ஒவ்வொரு விருதுக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் 30ம் தேதி விருது பெறும் கலைஞர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். இன்று 2018ம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் யார் என்பதைப் பார்க்கலாம். .

வில்லன் விருதுக்கு ஓரளவு நல்ல ஆரோக்கியமான போட்டி என்றே சொல்லலாம். ரஜினியின் 2.0 படத்தில் நடித்த அக்‌ஷய் குமாரை வில்லன் என்றே சொல்லமுடியாது. அவர் எந்திரன் ரஜினியைவிட நல்லவர். சர்கார் படத்தில் பழ.கருப்பையா, ராதாரவியும் சராசரி ரகம். கடைக்குட்டி சிங்கம் சந்துரு போன்றவர்கள் பட்டியலுக்குள் வந்தவர்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் விட இமைக்காநொடிகள் அனுராக் காஷ்யப் உடல் மொழியில் மிரட்டியிருந்தார்.

இவர்கள் அனைவரையும்விட வில்லனுக்கு மிக அழகாக பொருந்தியவர் அர்ஜூன். விஷாலின் இரும்புத்திரை படத்தில் ஸ்டைலிஷ் வில்லன் வேடத்தை இவரைவிட யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது. அதேபோன்று காலா படத்தில் வில்லனாக வரும் நானா படேகர். வெள்ளைச் சட்டையில் கொஞ்சம்கூட அழுக்குப்படாமல், குரல் உயர்த்திப் பேசாமல் வில்லன் வேடத்தை மிகச் சிறப்பாகவே செய்திருந்தார்.

ஆக, 2018ம் ஆண்டு சிறந்த எதிர்மறை நாயகனுக்கான டைம்ஸ் தமிழ் விருதை பெறப்போவது அர்ஜூன் அல்லது நானா படேகர்தான். இந்த இருவரில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை டிசம்பர் 30 அன்று அறிந்துகொள்ளுங்கள்.