16 வயது பெண்ணை மூன்றாவது மனைவியாக்க கடத்திய கயவன்! போக்சோ சட்டத்தில் அதிரடி கைது

ராமநாதபுரத்தில் மேஜர் ஆகாத பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியை அடுத்த கச்சான் குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் தனது அத்தை மகள்களான  பெண்ணரசி, மற்றும் தாமரைச் செல்வி ஆகியோரை அதே பகுதியில் திருமணம் செய்து வசித்து வந்தார்.

இந்நிலையில் முதல் மனைவியை கச்சான் கொண்டு பகுதியிலும் இரண்டாவது மனைவியை பனைக்குளம் பகுதியிலும் வீடு எடுத்து தங்க வைத்து, மாதம் ஒரு முறை மாறி மாறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். அந்த வகையில் முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தையும் இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இவ்வாறு இருக்கையில் முதல் மனைவியுடன் கச்சான் குண்டு  பகுதியில் தங்கி இருந்த பொழுது  அவர் வீட்டிற்கு எதிர் புறம் பாண்டியின் அக்கா ஒருவர் குடிபெயர்ந்து உள்ளார். அவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.

அதில் மூத்த மகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் பாண்டி அவரிடம் அடிக்கடி சென்று திருமணம் செய்து கொள்வதாக சில ஆசை வார்த்தைகளை கூறி அவரை காதல் வசப்பட வைத்துள்ளார். திருமணம்  ஆகி  2 மனைவி இருப்பது தெரிந்தும், வாட்ஸ்அப் செயலி மூலம் சிறுமி பாண்டியிடம் நீண்ட நாட்களாக பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென 16 வயது சிறுமி மாயமாக அவரை ஊர் முழுவதும் தேடிய தாயார், இறுதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரத்தில் பாண்டியும் தனது முதல் மனைவியின் மகள், இரண்டாவது மனைவியின் மகன் ஆகியோருடன் மாயமாகி இருந்தார். இதையடுத்து பாண்டியின் முதல் மனைவி சந்தேகித்து காவல் நிலையத்தில் தகவல் கூறினார்.

பின் பாண்டியின் செல்போன் நம்பரை டிரேஸ் செய்ததன் மூலம் அவர் தஞ்சாவூரில் தனியார் ஹோட்டல் ஒன்றில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பது தெரிய வந்தது. பின் அதிரடியாக அவ்விடத்திற்கு விரைந்து சென்று பாண்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்  இரண்டு குழந்தைகளையும் தாயாரிடம் ஒப்படைத்த காவல்துறையினர் பெண்ணை அரசு விடுதி காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர். பின் பாண்டியிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கட்டாயப்படுத்தி கடத்தி வந்து பழனியில் திருமணம் செய்து கொண்டு பின் தஞ்சையில் தனியார் கம்பெனியில் வேலைக்குச் சென்றும், ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகளுடன் வீடு வாடகைக்கு தேடினால் எளிதாக கிடைத்துவிடும் என்ற நோக்கில் அவர்களையும் அழைத்து வந்ததாகவும்  தெரிவித்தார். மேஜர் ஆகாத பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ததால் போஸ்கோ சட்டத்தின்கீழ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.