பிறக்கும் போது வெறும் 350 கிராம் தான்..! கடவுளின் கருணை..! டாக்டர்கள் முயற்சியில் 5 மாதங்களுக்கு பிறகு..!

அமெரிக்காவில் 15 வாரங்கள் முன்னதாகவே பிரசவம் நடந்ததால் சோப்பை விட குறைவான எடையுடன் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் மிகுந்த போராட்டத்துக்குப் பின் காப்பாற்றியுள்ளனர்.


அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரைச் சேர்ந்தவர்கள் டேமியன் - எபோனி பெண்டர் தம்பதி. இவர்களுக்கு 18, 15 மற்றும் 12 வயதில் மூன்று ஆண்குழந்தைகளுக்குப் பின்னர் ஒருபெண் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். 

அதற்கேற்ப பெண்டர் கருவுற்றார். அவர்கள் எதிர்பார்த்தது போலவே கருவில் இருந்தது பெண் குழந்தைதான் என்றும் தெரிய வந்தது. எனினும் பெண்டருக்கு ரத்த அழுத்தம் இருந்ததால் பிரசவத்துக்கு முன் பல பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை பரிசோதனை என்ற வகையில் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். 

கரு 25 வாரங்கள் வளர்ந்திருந்த போது போதுமான வளர்ச்சி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கருவைச் சுற்றிலும் போதுமான நீர்ச் சத்து இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனால் கரு நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் சென்று சேர்வதில் பாதிப்பு இருந்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து குழந்தையை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த 15 வாரங்கள் முன்னதாகவே பிரசவத்தை மேற்கொள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்தனர். அதன் படி பிரசவம் மேற்கொள்ளப்பட்ட போது பிறந்த குழந்தையின் எடை ஒரு சோப்பின் எடையை விட குறைவாக 13 அவுன்ஸ் எடை மற்றும் 10 அங்குல உயரத்துடன் ஒரு பார்பி பொம்மையின் அளவுக்கு மைக்ரோ மினி குழந்தையாக இருந்தது. 

மருத்துவர்கள் அடுத்த கட்ட சவால் குழந்தையை காப்பாற்றுவது. நவீன கருவிகளின் உதவியுடன் குழந்தைய் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து உரிய சத்துக்களை கொடுப்பதன் மூலம் குழந்தையின் எடையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

தனது வாழ்க்கையின் முதல் 5 மாதங்களை கருவிகளின் உதவியுடன் கழித்த குழந்தை கெல்லியின் தற்போதைய எடை என்ன தெரியுமா? 7 பவுண்ட். குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டு அந்தக் குழந்தை வாழப்போவதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.