போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கினால் 15 லட்சமா? வரிசை கட்டிய மக்கள் - எங்கே தெரியுமா?

தபால் கணக்கு தொடங்கினால் 15 லட்சம் ரூபாய் தரப்படும் என்ற வதந்தி பரவியதால் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சில தினங்கள் முன்னர் வதந்தி ஒன்று பரவி வந்தது. அதாவது தபால் கணக்குகளை உடையவர்களுக்கு மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் அளிக்கும் என்று பொய்யான தகவல்கள் வெளியாகின. 

தமிழக கேரளா எல்லை பகுதியில் டீ எஸ்டேட்டுகள் மிகுதியாக உள்ளன. இங்குள்ள மூணார் பகுதியை சேர்ந்த மக்கள் மேற்கூறிய வதந்திகளை நம்பி 300 தபால் நிலையங்களில் கிட்டத்தட்ட 1050 பேர் முற்றுகையிட்டுள்ளனர். மேலும், 3 நாட்களாக அவர்கள் பனிக்கு செல்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்றுள்ளனர். வெறும் 100 ரூபாய் மட்டுமே செலுத்தி கணக்கை தொடங்க முடியும் என்பதால் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

இந்த செய்தியானது முற்றிலும் வதந்தியென்று கூறியபோதிலும் வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் நம்பவில்லை. எப்படியாவது வதந்தி உண்மையானால் தங்களுக்கு 15 லட்சம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கையாக நின்று கொண்டிருந்தனர்.

தகவலின் வீரியத்தை உணர்ந்த தபால் நிலையங்கள் கரும்பலகையில்,"இது முற்றிலும் வதந்தியான‌ செய்தி. யாரும் நம்பி நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை"என்று எழுதி வைத்தனர். இருப்பினும் பேராசையால் மக்கள் கூட்டம் குறையவில்லை என்று சில தபால்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சம்பவமானது மூணார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.