ரூ.13 லட்சம்! கத்தை கத்தையாக ரோட்டில் வீசப்பட்ட ரொக்கப்பணம்! ஆம்பூர் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ரூபாய் 13 லட்சம் ரொக்கப் பணத்தை சாலையில் வீசி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தமிழகத்திலேயே அதிகம் பணம் புழங்கும் தொகுதிகளில் ஒன்றாக வேலூர் மாவட்டம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதேபோல் அதிமுக சார்பில் ஏசிஎஸ் குழுமத் தலைவர் ஏ சி சண்முகம் போட்டியிடுகிறார். வெற்றி பெறுவதற்காக இருவருமே பணத்தை தண்ணீராக செலவழிக்கின்றனர்.

நாளையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பணி ஜரூராக வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆம்பூரில் உள்ள பன்னீர்செல்வம் நகரில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கிற்குப் பணம் அளித்து வந்தனர்

இந்த தகவல் அறிந்து தேர்தல் பறக்கும் படையினர் பன்னீர்செல்வம் நகர் நோக்கி புறப்பட்டனர். இதனை அறிந்து பணம் விநியோகித்துக் கொண்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அங்கு தேர்தல் பறக்கும் படையினர் வந்து விட்டனர்.

இதனால்தான் கையில் வைத்திருந்த சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை கத்தை கத்தையாக அப்படியே சாலையில் வீசி விட்டு அவர்கள் தப்பியுள்ளனர். பணத்தை சாலையில் இருந்து எடுத்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு பண விநியோகம் செய்தது யாரென்று விசாரித்து வருகின்றனர்.

13 லட்சம் ரூபாய் பணத்தை சாலையில் வீசி விட்டுச் செல்கிறார்கள் என்றால் அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்று அங்கிருந்த மக்கள் அங்கலாய்த்த படி சென்றனர்.