தேனி மாவட்டம் திண்டுக்கல் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு ஆண்டுக்கு 10 பேராவது உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தேனி வீரபாண்டி To.எஸ் காலனி! 3 கிமீ தூரம்! தொடரும் விபத்துகள்..! பறிபோன 12 உயிர்கள்! பீதியில் மக்கள்! அமானுஷ்யம் காரணமா?

தேனி மாவட்டம் வீரபாண்டியில் இருந்து எஸ்.எஸ் காலனி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதாவது சுமார் 3 கிமீ தூரத்தில் தொடர் விபத்துகள் ஏற்படுவதும், அதனால் பலர் படுகாயமடைவதும் உயிரிழப்பு ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழக கேரளப் பகுதிகளை இணைக்கும் NH 183 தேசிய நெடுஞ்சாலை வழியே சபரிமலை, தேக்கடி, இடுக்கி ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்லும். ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், கனரக வாகனங்கள் எந்நேரமும் செல்லும் நெடுஞ்சாலை இது.
4 நாட்களுக்கு முன்னர் சின்னமனூரைச் சேர்ந்த பூ வியாபாரி காளிமுத்து சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அவரும் அவரது மனைவி மாரியம்மாளும் உயிரிழந்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதே இடத்தில் அடுத்த 2 நாட்களில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
இந்த இடத்தில் விபத்துகள் ஏற்பட்டு வருடத்திற்கு 10-க்கும் மேற்பட்டோர் பலியாகிறார்கள். 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைகிறார்கள் என ஒவ்வோரு ஆண்டும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறை வைத்த பேரிகார்டுதான் விபத்துக்கு காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
வாகன ஓட்டிகளின் வேகம்தான் விபத்திற்கான முதல் காரணம் எனவும் இந்த ஆண்டு மட்டும் 12 உயிரிழப்புகள் நடந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்துகள் தொடர்வது வருத்தமளிப்பதாக தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை சிறப்பு வருவாய் அலுவலர் இனி விபத்துகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் குறிப்பிட்ட அந்த மூன்று கிலோ மீட்டர் சாலை சபிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஏதோ அங்கு அமானுஷ்யம் இருப்பதாகவும் எனவே தான் அடிக்கடி உயிர்பலி வாங்குவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.