1 வயது குழந்தை உட்பட 11 சிறுவர், சிறுமியருக்கு கொரோனா..! திருப்பூர் பகீர்!

திருப்பூரில் நேற்று ஒரே நாளில் 35 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 வயது குழந்தை உட்பட 11 பேர் சிறுவர், சிறுமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாகவே வேகமாக பரவி வருகிறது. திருப்பூரில் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வரை 25 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த 25 பேருமே டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூரில் மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது என்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதில் 1 வயது ஆண் குழந்தை உட்பட 11 பேர் சிறுவர் சிறுமியர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும் இதில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் சிறுவர் சிறுமியர் 11 உட்பட பாதிக்கப்பட்ட 35 பேரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள்தான் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டெல்லி மாவட்டத்தில் சென்று வந்தவர்கள் தங்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர்களை முத்தம் கொடுத்தல் மற்றும் கொஞ்சியதன் மூலமாக அவர்களுக்கு பரவி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். விவரம் தெரியாத 1 வயது பிஞ்சு குழந்தை உட்பட 11 சிறுவர் சிறுமியர்களை எவ்வாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்துவது என்று புரியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.