105 வயது..! ராணி போல் பார்த்துக் கொண்ட பிள்ளைகள்..! வியக்க வைக்கும் வகையில் வாழ்ந்து மறைந்த தங்க கனி பாட்டி..!

சென்னை, வில்லிவாக்கத்தில் வசித்து வந்த மூதாட்டி 105 வயது கொண்ட தங்கக் கனி அம்மாள் நேற்று இயற்கை எய்தினார். என் உறவுக்கார முதிர்ந்த தாயார். அவருக்கு அஞ்சலி செலுத்த நேற்று இரவு சென்றிருந்தேன்.


குடும்ப நிகழ்ச்சிகளில் அபூர்வமாக அவரை பார்த்ததுண்டு. தன்னிடம் ஆசிபெற வருவோரை பாட்டுப்பாடி வாழ்த்துவது அவர் வழக்கம்.இந்த காலத்தில் 90-ஐ தாண்டுவதையே அரிதாக பார்க்கிறோம். 75-ஐ தாண்டும் போதே பலருக்கு தள்ளாட்டம் வந்துவிடுகிறது.

இந்த தாயாரோ நூறு வயதை தாண்டி 105 வரை "ஜம்"மென்று வாழ்ந்திருக்கிறார். கடைசி இரண்டு மூன்று தினங்களில் தான் நினைவு தப்பி இருக்கிறது. இவருடைய இந்த நீண்ட நெடிய அருமையான வாழ்க்கைக்கு முக்கியக் காரணம் இவருடைய மன உறுதி. அதைவிட மிக முக்கியம். பிள்ளைகள் இவரிடம் கொண்டிருந்த நேசம். காட்டிய அரவணைப்பு.

ஒரு நார் கட்டில். தலைமாட்டில் ஒரு காற்றாடி அமைத்துக் கொடுத்து குழந்தையை கவனிப்பது போல கவனித்திருக்கிறார்கள். கூப்பிட்ட குரலுக்கு பணிவிடை நடந்திருக்கிறது.

வயது மூப்பின் காரணமாக இந்த தாயாருக்கு காலை உணவு அதிகாலை 5 மணிக்கும், இரவு உணவு மாலை 5 மணிக்கும் தேவைப்பட்டிருக்கிறது. கேட்டவுடன் அதை செய்து கொடுத்து அவருடைய வயதையும் மனதையும் நிறைத்திருக்கிறார்கள்.

கஞ்சியும் சிறிய வெங்காயமும் இவருக்கு மிகவும் பிடித்தமானது உணவு. இறப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை அதை வாங்கி உண்டிருக்கிறார். இடைவேளையில் இவர் விரும்பி சாப்பிடுவது முறுக்கு. அதை ஒரு டப்பாவில் போட்டு அருகிலேயே வைத்திருக்கிறார்கள். மிகவும் பிடித்தது பனங்கிழங்கு. சீசனில் கிடைக்கும் போது தவறாமல் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இவருக்கு இருந்த ஓரிரு பற்களும் மிக உறுதியாக இருந்துள்ளன. அவற்றைக் கொண்டு பனங்கிழங்கை மிகவும் சுவைத்து சாப்பிட்டுள்ளார்.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நமது குடும்பங்களில், முதியவர்களுக்கு பெரும் பாதுகாப்பு இருந்தது. அந்த சூழல் இப்போது இல்லை.

அரும்பாடுபட்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, வயது முதிர்ந்த காலத்தில் அல்லல்படும் ஏராளமான முதியவர்களை இக்காலத்தில் பார்க்கிறோம்.

இத்தகைய காலகட்டத்தில் இந்த 105 வயது மூதாட்டி சிறப்பாக வாழ காரணமாக பிள்ளைகளை குறிப்பாக மருமகள்களை மற்றும் குடும்பத்தினரை மனதார பாராட்டினோம்.

வருடத்திற்கு ஒருமுறை இவர்கள் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், வள்ளிவிளை க்கு செல்வது உண்டு. இந்த ஒரு வார காலமும் இங்கே தெரிந்தவர்கள் பொறுப்பில் விட்டுச் சென்றால் உரிய பாதுகாப்பு இருக்காது என்று குழந்தையைப்போல தூக்கிச்சென்று வந்துள்ளார்கள்.

இத்தனைக்கும் மறைந்த 105 வயது மூதாட்டிக்கு குழந்தை இல்லை. இவ்வளவு நேசிப்புடன் கவனித்துக் கொண்டது தங்கையின் பிள்ளைகளும் குடும்பத்தினரும்தான். உலகத்தில் இப்படியும் பாசப்பேய்கள் உள்ளனர்.

நன்றி: ராஜதுரை