தென்காசியில் 100 அடி உயர புத்த கோபுரம் – தென்னிந்தியாவில் முதன்முறையாக உலக அமைதிக்காக கட்டப்பட்ட புத்தர் கோயில்

தென்னிந்தியாவின் முதல் புத்த கோவில் தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலுக்கு அருகிலுள்ள வீரிருப்பு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.


150 அடி விட்டமும், 100 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ள இக்கோபுரம் திறப்பு விழா, கோபுரத்தில் புத்தர் அஸ்தி வைக்கப்படும் நிகழ்ச்சி. இந்த மாதம் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி, அங்குள்ள உலக அமைதிக்கான புத்தர் கோயிலில், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஜப்பான், கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த புத்த பிட்சுகள் கலந்துகொண்டனர்.

வீரிருப்பு கிராமத்தை சேர்ந்த முத்தையாவும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2000ம் ஆண்டு புத்தர் கோயில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் அமையப்பெற்ற இந்த இடத்தில் நிப்போசன் மியொ ஹொஜி தமிழ்நாடு, மற்றும் புத்த பிட்சுகள், புத்த பிக்குனிகள் சார்பில் கோயில் கட்டப்பட்டது. இக்கோபுரம் ரூ. 5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பிரதமர் மோடி மங்கோலியா வந்தபோது, அங்குள்ள படைப்பாளிகளுக்கு புத்தரின் சிலையை வழங்கி சிறப்பித்தார். புத்தரின் போதனைகளை நிப்போசன் மியோ ஹோஜி அமைப்பின் தென்னிந்தியத் தலைவர் இஸ்தான்ஜி பின்பற்றி, அதன் மூலம் இந்த அமைதி கோபுரத்தை நிறுவியுள்ளது பெருமைக்குரியது.

இந்த கோயில் 100 அடி உயர கோபுரத்துடன் பார்க்க பிரமாண்டமாக காட்சி தருகின்றது.. சங்கரன் கோயிலுக்கு அருகிலுள்ள வீரிருப்பு நாட்டைச் சேர்ந்த காந்தியரான சுப்பையாவின் வேண்டுகோளின் பேரில் புத்த கோயில் சில ஆண்டுகளாக கட்டப்பட்டு இயக்கப்பட்டது.

இந்த கோயில் கோபுரத்தில் வைப்பதற்காக புத்தரின் அஸ்தி ஜப்பானில் இருந்து சங்கரன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. மற்றும் சங்கரன் கோயில் கோமதியம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள காந்தி மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கோபுரத்தின் முன் அமைக்கப்பட்ட தனிப் பந்தலில் புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.

பின்னர், புத்த துறவிகள் அஸ்தியைத் தலையில் சுமந்து சென்று கோபுரத்தின் உச்சியில் வைத்தனர். இதையடுத்து, அஸ்தி வைக்கப்பட்ட சிறு அறை சிமெண்டால் அடைக்கப்பட்டது. அப்போது, புத்த பிக்குகள் மங்கல ஒலி எழுப்பி பிரார்த்தனை செய்தனர். பின்னர், அனைத்து மதப் பிரார்த்தனை, வழிபாடு நடைபெற்றது.