மோடியை எதிர்த்து வாரணாசியில் தமிழக விவசாயிகள் 100 பேர் போட்டி! திருச்சியில் இருந்து புறப்படுகின்றனர்!

வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து, தமிழக விவசாயிகள் 100 பேர் போட்டியிட உள்ளதாக, அறிவித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நாடாளுமன்ற மக்களவைக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாஜக தலைமையிலான கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மறுபுறம் பிரசார பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது தற்போதைய தொகுதியான வாரணாசியிலேயே போட்டியிட உள்ளார். இந்நிலையில், அவரை எதிர்த்து, தமிழக விவசாயிகள் 100 பேர் போட்டியிடுவார்கள் என்று, விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ''தமிழக விவசாயிகள், கடந்த 2017ம் ஆண்டில் டெல்லியை முற்றுகையிட்டு, வறட்சி நிவாரணம் கேட்டும், நதிகளை இணைக்கக் கோரியும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். ஆனால், பிரதமர் மோடி, எங்களை நேரில் சந்திக்கக்கூட வரவில்லை.

அத்துடன், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கூட அவர் தரவில்லை. தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், இதுதொடர்பாக ஏதேனும் வாக்குறுதியை அவர் அளிப்பாரா என்று எதிர்பார்த்து வருகிறோம். ஒருவேளை வாக்குறுதி தந்தால் அமைதி காப்போம்.

இல்லை எனில், பிரதமர் மோடியை எதிர்த்து, எங்கள் விவசாயிகள் 100 பேர் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார்கள்,'' என்றும் குறிப்பிட்டார். இதற்காக 100 விவசாயிகள் வாரணாசி செல்ல உள்ளதாகவும் அய்யா கண்ணு கூறியுள்ளார்.