பெங்களூரு: 10 வயது பேரனை கொன்ற புகாரில் அவனது பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கை, கால்களை கட்டி ஆற்றில் தள்ளிவிட்டேன்! பாட்டியால் 10 வயது பேரனுக்கு நேர்ந்த துயரம்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் ஓடும் ஹேமாவதி ஆற்றில், கை, கால்களில் கயிறு கட்டிய நிலையில் ஒரு சிறுவன் குதிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. இந்த காட்சிகள் இணையத்தில் பரவிய சில மணிநேரத்தில் 65 வயது பெண் ஒருவர் கேஆர் பேட் டவுன் போலீசில் வந்து, தனது பேரனை கொன்றுவிட்டதாகக் கூறி சரணடைந்துள்ளார்.
உடனடியாக, இதுபற்றி விசாரித்த போலீசார், சம்பவம் உண்மைதான் என கண்டறிந்தனர். அத்துடன் சிறுவனின் சடலத்தையும் மீட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்மணியின் பெயர் சாந்தம்மா என்றும், குடும்பத்தகராறு காரணமாக பேரனை கொன்றுவிட்டார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி, சாந்தம்மாவிற்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்துவிட்டார்.
இந்த திருமணத்தில் பிறந்தவன்தான் கொல்லப்பட்ட 10 வயது சிறுவன் பிரஜ்வால். சிறுவனை தாயின் பொறுப்பில் விட்டுவிட்டு, அந்த பெண் மீண்டும் மறு திருமணம் செய்துகொண்டு, மங்களூரு சென்றுவிட்டாராம். இதையடுத்து, அவருடன் சிறுவனை யார் பராமரிப்பது என்பது தொடர்பாக, சாந்தம்மாவிற்கும், அவரது மகளுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், சாந்தம்மா,கடந்த சில நாட்களாகவே அதிருப்தியுடன் காணப்பட்டார்.
திங்கள்கிழமை மாலை பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுவன் பிரஜ்வாலை கயிறு கட்டி ஆற்றில் தள்ளிவிட்ட சாந்தம்மா, பிறகு அவரும் ஆற்றில் குதிக்க முயன்றுள்ளார். ஆனால், அவ்வழியே சென்ற நபர்கள் அவரை தடுத்து நிறுத்திவிட்டனர். இதன்பிறகே, செய்த தவறு உணர்ந்து உடனடியாக, போலீசில் சரணடைந்திருக்கிறார்.