ஒரு கிலோ கடல் மீன் 1 ரூபாய்! காரைக்குடியில் அதிரடி ஆஃபர்! குவியும் அசைவ பிரியர்கள்!

ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் செய்தியானது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாக வியாபாரத்தை பெருக்குவதற்காக கடைக்காரர்கள் பல்வேறு வகையான யுத்திகளை கையாண்டு வருகின்றனர். சென்ற மாதத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 பைசாவுக்கு பிரியாணி விற்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு கடையில் பிரியாணி வாங்கினால் டீ-ஷர்ட் இலவசம் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.

தற்போது இதுபோன்ற  வித்தியாசமான அறிவிப்பானது சிவகங்கை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் பர்மா காலனி என்ற இடம் அமைந்துள்ளது.  இங்கு மீன் கடை ஒன்று புதிதாக இயங்கி வருகிறது. இந்த கடையில் இன்று முதலில் மீன் வாங்க வந்த 100 பேருக்கு ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ மீனை ஒரு ரூபாய்க்கு வாங்கிய மகிழ்ச்சி வாடிக்கையாளர்களின் முகத்தில் தென்பட்டது.

இந்த அறிவிப்பு மேற்கொண்டதன் காரணத்தை அந்த கடை உரிமையாளர் கூறியுள்ளார். "என் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல். காரைக்குடியில் இன்று முதல் மீன் கடையை தொடங்கி உள்ளேன். மீமிசல் மீனவர்கள் அன்று பிடிக்கும் மீன்களை அன்றே விற்கும் பழக்கமுடையவர்கள். பனிக்கட்டியில் வைத்து மீன்களை விற்க மாட்டோம்.

காரைக்குடியில் புதிதாக கடை தொடங்கியிருப்பதை அறிவிப்பதற்காக இந்த  அறிவிப்பை செய்தோம். இதற்காக தான் முதலில் வரும் 100 பேருக்கு ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் வந்தவர்களுக்கு கொள்முதல் விலைக்கே மீன்களை விற்றோம்" என்று கூறினார்.

இந்த அறிவிப்பினால் பர்மா காலனியில் இன்று காலை முழுவதும் கூட்டம் அலைமோதியது.