கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 கலெக்டர்கள் மதுரையில் மாற்றப்பட்டுவிட்டதாக சொல்லி வருந்துகிறார்கள் மக்கள். ஆளும் கட்சியைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா கொடுக்கும் டார்ச்சர்தான் முக்கியம் காரணம் என்கிறார்கள்.
மதுரைக்கு மட்டும் கலெக்டர்கள் ஏன் செட்டாகவே இல்லை? காரணம் ராஜன் செல்லப்பாவா?

இதுகுறித்து இன்று கம்யூனிஸ்ட் கட்சியும் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மாவட்ட ஆட்சியர்களை மாற்றுவது அரசின் கடமைப் பொறுப்பு. எனினும் ஆட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரணமாக ஆட்சிப்பணி அதிகாரிகள் மாற்றப்படுவது நிர்வாகக் கட்டமைப்பை நிலைகுலைத்து விடும்.
நேர்முகத் தேர்வு முடத்து கிடப்பில் போட்டு வைத்திருந்த அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்தை செய்தததைத் தொடர்ந்து ஆளும் கட்சியினர் கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர் மாற்றம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி, மாற்றி நியமனம் செய்துள்ள அரசின் நடவடிக்கைகள் ஆழமான சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.
ஆளும் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாத அலுவர்களை பணி மாற்றம் செய்து வரும் அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்கிறார் முத்தரசன்.
இப்போது மதுரையின் புதிய கலெக்டராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டு உள்ளார். லோக்சபா தேர்தலின் போது, மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில், பெண் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் நுழைந்த விவகாரத்தில், அப்போது கலெக்டராக இருந்த நடராஜன் மாற்றப்பட்டார்.
அதன்பிறகு தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நாகராஜன் கலெக்டராக பொறுப்பு ஏற்றார். இவர் நேர்மைக்கு பெயர் போனவர். அரசியல் தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல், அங்கன்வாடி மைய ஊழியர்களை நியமித்தார். இதையடுத்து, அவரை இடம் மாற்றி, அரசு உத்தரவிட்டது
சென்னை ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்த ராஜசேகர், ஜூலை 1ல் கலெக்டராக பொறுப்பு ஏற்றார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி, அவர், திடீர் விடுப்பில் சென்றார். ஆளுங்கட்சி தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியால் அவர் விடுப்பில் சென்றதாக, ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் அரியலூர் கலெக்டராக இருந்த டி.ஜி.வினய், மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவராவது ஆளும் கட்சியின் டார்ச்சரை தாக்குப் பிடிப்பாரா?