அட்சய திரிதியை என்றால் என்ன அன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும் என்பதற்கு ஒரு பலமான ஐதீகம் உள்ளது.
அட்சய திரிதியை என்றால் என்ன? அன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.
எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள்.
ஏன் தங்கம் வாங்க வேண்டும்...?
அட்சயதிரிதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.
அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.
எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது.
நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது.தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.
தங்கம் மட்டும் அல்ல எதுவும் வாங்கலாம்!
அட்சய திரிதியை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது சிறப்பு. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், புதிதாக தொழில் தொடங்கவும், புது முயற்சிகளில் ஈடுபடவும், கட்டடப்பணி துவங்கவும் இந்நாள் உகந்ததாகும். தங்க ஆபரணங்களை அட்சய திரிதியை நாளில் விருப்பத்துடன் வாங்குவர். மஞ்சள், உப்பு, பலசரக்கு சாமான்கள்,வழிபாட்டுக்குரிய பூஜை சாமான்கள், புத்தாடை, புத்தகம், டி.வி., வாஷிங்மிஷின், ஏ.சி., போன்ற மின் சாதனங்கள், டூவீலர், கார் போன்ற வாகனங்கள், கட்டுமான பொருட்கள், இப்படி எதையும் வாங்கலாம்.