பசியுடன் எத்தனை பேர் வந்தாலும் இலவச உணவு! அசத்தும் காளி மன்னன் ஓட்டல்!

பசியுடன் வந்து, இலவச உணவு கேட்டால், எந்த எதிர்ப்புமின்றி, காசு வாங்காமல் அவர்களுக்கு உணவு பரிமாறி வருகிறார் ஒரு ஓட்டல் உரிமையாளர்.


ஆம், அமெரிக்காவில்தான் இத்தகைய ஓட்டல் நடத்தி வரும் அதிசய நபர் உள்ளார். அவரது பெயர் மன்னன். காளி மன்னன் என்ற அவர் ,வாஷிங்டன் டிசி பகுதியில் சகினா ஹலால் கிரில் என்ற பெயரில் உயர்தர ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வருவோரில், சிலர், தங்களுக்கு இலவச உணவு வேண்டும் எனக் கேட்டால், உடனே அவரது கடையில் விநியோகிக்கிறார்கள்.

இதற்கு உரிமையாளர் மன்னனும் எந்த எதிர்ப்பு கூறாமல் இருப்பது, காண்போரை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் இந்த கடையை தொடங்கிய மன்னன், இதுவரை 80,000 பேருக்கு, இப்படி காசு வாங்காமல் இலவச உணவு வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். ஒருவேளை உணவு வாங்க காசில்லை என்றால், கவலைப்படவோ, கஷ்டப்படவோ வேண்டாம், எனது கடைக்கு வந்து ஒருவேளை உணவு வயிறார சாப்பிட்டு போங்கள், என்று அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சாலையோரம் திரியும் வீடில்லாத மக்களை பார்த்தபோது, இத்தகைய யோசனை மனதிற்கு தோன்றியதாகவும், அதன்பேரில்தான், இத்தகைய இலவச உணவு திட்டத்தை செயல்படுத்திவருவதாகவும், மன்னன் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, இந்த ஆண்டில், அவர் ஒரு புதிய சபதம் எடுத்துள்ளாராம். அதாவது, ஆண்டுதோறும் 16,000 பேருக்கு, இலவச உணவு தருவதுதான் அந்த சபதமாம். காசே முக்கியம் என ஓடும் உலகில் இப்படியும் மனிதாபிமானிகள் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்தானே!...